அரை நூற்றாண்டு பழமை வாய்ந்தது கடலூர் - விருத்தாசலம் ரயில் வழித்தடம். இந்த இருப்புப் பாதையின் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெற்று, அதன்மூலம் ரயில்வே துறை குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.
கடலூர் மாநகராட்சி, நெய்வேலி நகரியம், வடலூர், விருத்தாசலம் நகராட்சிகளை உள்ளடக்கிய பெரும் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் இந்த வழித்தடத்தில் உள்ளன. ஆனாலும், மிகவும் குறைந்த அளவில்தான் இந்த வழித்தடத்தில் பயணிகளுக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாறி 20 ஆண்டுகள் கடந்து விட்ட சூழலில், இன்று வரையிலும் பயணிகளுக்கான 3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த வழித்தடம் மட்டும் அப்படியே இருக்கிறது.
சரக்கு ரயில்களைக் கொண்டு மிகுந்த வருவாய் ஈட்டும் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஒற்றை நடைமேடைகள் மட்டுமே உள்ளன. கிராசிங் ரயில்களை கையாளக் கூட கூடுதல் நடைமேடைகள் கிடையாது. இந்தப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் இருக்கின்ற ஒற்றை நடைமேடைகளும் 16 பெட்டிகள் மட்டுமே நிற்கும் அளவுக்கே உள்ளன.
» காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜேந்திர பால் கவுதம்: இண்டியா கூட்டணியில் சலசலப்பு
» உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு ‘ஏங்கும்’ நோயாளிகள்!
ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் வெளிமாநில ஊழியர்கள் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். வடலூர் வள்ளலார் மையத்துக்கு தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் வந்து செல்கின்றனர். துறைமுக நகரம் மற்றும் தொழில் நகரம் போன்ற பெருமைகளை கொண்ட கடலூர் ரயில் நிலையத்தை தொடக்கமாக கொண்டிருக்கிறது இந்த வழித்தடம்.
ஆனாலும், எந்த வளர்ச்சியும் இல்லாமல் இந்த வழித்தடம் அப்படியே இருக்கிறது. “தெற்கு ரயில்வே தனக்கான பகுதியில் பல்வேறு இடங்களில் கூடுதல் ரயில்களை இயக்கி வருகின்றன. அந்தந்தப் பகுதி ரயில் நிலையங்களுக்கான வளர்ச்சிக்கு உரிய நிதியை அவ்வப்போது ஒதுக்கித் தருகிறது.
குறிப்பாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரளத்தில் உள்ள ரயில் நிலையங்களின் வளர்ச்சியும், இருப்பு பாதைகளின் விரிவாக்கமும் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டும்படியாக இருக்கின்றன. அதையெல்லாம் ஒப்பிடும் போது, இந்த கடலூர் - விருத்தாசலம் பகுதிக்கு அநீதி இழைக்கப்படுகிறது” என்ற இப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கடலூரைச் சேர்ந்த ரயில் ஆர்வலர் வைரவன் என்பவர் கூறுகையில், “திருச்சி கோட்டத்தின் சரக்கு வருவாயில் கடலூர் - விருத்தாசலம் வழித்தடம் பெரும் பங்காற்றுகிறது. ஆனால், இவ்வழியாக மிகவும் குறைந்த அளவே பயணிகளுக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதுவும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி வழியாக விருத்தாசலம் - தாம்பரம் இடையே இருபக்கமும் இன்ஜினுடன் கூடிய ரயில்களை காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்க வேண்டும். இதன்மூலம் இப்பகுதி மக்கள் சென்னைக்கு சென்று வருவது எளிதாகும்.
புதுச்சேரி மங்களூரு, புதுச்சேரி யஷ்வந்த்பூர் ரயில்களை விழுப்புரத்தில் பைபாஸ் அமைத்து புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி, கடலூர், நெய்வேலி விருத்தாசலம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் - திருப்பதி மாலை எக்ஸ்பிரஸ் மற்றும் காட்பாடி - விழுப்புரம் காலை பயனிகள் ரயிலை பண்ருட்டி, கடலூர் வழியாக விருத்தாசலம் வரை நீட்டிக்க வேண்டும். இது தவிர வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர், விருத்தாசலம் வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலை விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் வழியாக விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால், கடலூர் - விருத்தாசலம் வழித்தடம் சிறப்புற்று விளங்கும். இதன்மூலம் இப்பகுதியின் வர்த்தகம் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். “இந்த வழித்தடத்தை மேம்படுத்த ரயில்வே துறையிடம் பலமுறை முறையிட்டு விட்டோம். எந்தப் பணியும் நடப்பதாக தெரியவில்லை.
தற்போதைய கடலூர் மக்களவை உறுப்பினர் இதில் உடனடியாக தலையிட்டு, உரிய அழுத்தங்களைத் தர வேண்டும். அப்படி அவர் முன்னெடுக்கும் போது, இப்பகுதியில் உள்ள அனைத்துக் கட்சியினரும், கொள்கை பேதமின்றி இந்த வழித்தடத்தை மேம்படுத்த ரயில்வே துறைக்கு ஒருமித்த அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று இங்குள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.