உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு ‘ஏங்கும்’ நோயாளிகள்!

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: உரிகம் மலைக் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனப்பகுதிகளால் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மலைக் கிராம மக்களுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

கர்நாடக மாநில எல்லை: இதில், அஞ்செட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கர்நாடக மாநில எல்லையை ஒட்டி உரிகம் மலைக் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேபோல, இக்கிராமத்தைச் சுற்றிலும் கோட்டையூர், வீரனப்பள்ளி, ஜீவநத்தம், பிலிக்கல், நூருந்துசாமிமலை, உடுபராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

50 கிமீ தூர பயணம்: இப்பகுதி கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் அவசர மருத்துவச் சிகிச்சைக்கு உரிகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஆனால், இங்கு போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால், உரிய மருத்துவச் சிசிச்சை பெற முடியாத நிலையுள்ளது.

இதனால், 50 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியது உள்ளதாக மலைக் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிகிச்சை கிடைக்கவில்லை: இதுதொடர்பாக உரிகம் உள்ளிட்ட மலைக் கிராம மக்கள் கூறியதாவது: உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறோம். ஆனால், இங்கு உரிய மருத்துவ வசதியில்லாததால், உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில்லை.

இங்கு பணிபுரிந்த ஒரு மருத்துவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணியிடம் மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். அதன் பின்னர் புதிய மருத்துவரைப் பணி அமர்த்தவில்லை. இதனால், நோயாளிகளுக்கு, செவிலியர்களே சிகிச்சை அளிக்கும் நிலையுள்ளது.

மருத்துவர் இல்லையா என கேள்வி எழுப்பினால், 22 கிமீ தூரத்தில் உள்ள அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கும் போதிய மருத்துவர் இல்லாததால், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நாங்கள் பணம் செலவு செய்து அங்கு செல்ல முடியாத நிலையால், உரிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது.

இரு மருத்துவர் தேவை: எனவே, மலைக் கிராம மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்க உரிகம் சுகாதார நிலையத்தில் இரவு, பகல் என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரு மருத்துவர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும், கூடுதல் செவிலியர்களை நியமனம் செய்வதோடு, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE