வானிலை எச்சரிக்கையால் முடங்கியது மீன்பிடித் தொழில்: சிக்கன், முட்டை விலை அதிகரிப்பு @ தூத்துக்குடி

By அ.அருள்தாசன்

தூத்துக்குடி: சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் அடியோடு முடங்கியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் காரணமாக ஏற்கெனவே விசைப் படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், கடந்த 7 நாட்களாக நாட்டுப் படகுகளும் கடலுக்கு செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன், முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த 17-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், மீனவர்கள் வரும் 26-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன் விபரம்: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழக கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதி, மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ வரை வீசக்கூடும். அக்காற்றானது படிப்படியாக உயர்ந்து 60 முதல் 70 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். எனவே, 26.05.2024 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் ஏற்கனவே 7 நாட்கள் கடலுக்கு செல்லாமல் உள்ள நிலையில் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் வரும் 26-ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசைப் படகுகளும் கடலுக்கு செல்லாத நிலையில், தற்போது ஒரு வாரமாக நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாத காரணத்தால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்களின் விலையும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், மீன்பிடித் தடைக்காலம் காரணமாக கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதலே மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாட்டுப் படகுகளும் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, மீன்களை வாங்கி விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

மீன்கள் தட்டுப்பாடு காரணமாக சிக்கன் மற்றும் முட்டைக்கு மக்கள் மத்தியில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன் மற்றும் முட்டையின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிலோ ரூ.180-க்கு விற்பனையான சிக்கன் தற்போது ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ரூ.5-க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது ரூ.6.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் சிக்கன், முட்டைக்கான விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தூத்துக்குடியில் கோழிக்கறி கடை உயிரிமையாளர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE