சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

By காமதேனு

சென்னையில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றப்பட்டன.

குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ் என்ற மாணவன், நேற்று மாலை பள்ளி முடிந்தது சக மாணவர்களுடன் அரசுப் பேருந்தில் பயணித்தார்.

அப்போது, சந்தோஷ் பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்ததாக தெரிகிறது. பேருந்து குன்றத்தூர் தேரடி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக மாணவன் சந்தோஷ், பேருந்தின் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து பேருந்தின் பின்பக்க சக்கரம் சந்தோஷின் கால்கள் மீது ஏறியது. இதில் சந்தோஷின் இரண்டு கால்களும் நசுங்கின. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன.

தற்போது முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்து மாணவன் கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில், அதனை கேட்காததால் மாணவர்கள், இவ்வாறு துயரத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE