வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம்: தொழிலாளியின் எலும்புக்கூடு 9 மாதங்களுக்கு பிறகு கண்டெடுப்பு

By KU BUREAU

சென்னை: இடிபாடுகளில் சிக்கி மாயமான மேற்கு வங்க தொழிலாளியின் எலும்புக்கூடு 9 மாதங்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை, வேளச்சேரியில் 2023 டிச.4-ம் தேதி கேஸ் பங்க்அருகே ஐந்து பர்லாங்க் சாலைசந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துவிபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 10 பேரை மீட்டனர்.

50 அடி கட்டுமானப் பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக்கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன்ஆகியோரை சுமார் 100 மணி நேரபோராட்டத்துக்குப் பின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சடலமாகமீட்டனர். இந்நிலையில் கட்டுமானப்பணி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் பக்டி,தீபக் பக்டி ஆகியோரில் ராகுல் பக்டிபொதுமக்களால் மீட்கப்பட்டார்.

தீபக் பக்டி என்ன ஆனார் என்றுதெரியாமல் இருந்தது. இது தொடர்பாக கிண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பணியில் இருந்த பாதுகாப்புபொறியாளர் வீரன், மெஷின் ஆபரேட்டர் சுரேஷ் ஆகிய இருவரும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அடித்தள பகுதியை நேற்றுபார்வையிட்டபோது எலும்புக்கூட்டுடன் மண்டை ஓடு ஒன்று இருந்தது.

இதுகுறித்து உடனடியாக கிண்டிபோலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கிருந்த எலும்புகளை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாயமான தீபக் பக்டியின் எலும்புக்கூடாக இது இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர். மருத்துவ ஆய்வுக்குப் பின்னரே கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு யாருடையது என தெரியவரும் என போலீஸார் கூறினர். மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE