`இலக்குகளை அடையாளம் காட்டுபவர்கள்' முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

By KU BUREAU

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டவாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு, அவர்களுக்கு எதிர்கால இலக்குகளையும் அடையாளம் காட்டி வெற்றித்திசையை சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர் தினநல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

``கல்வி கற்றிடின் கழிந்திடும் மடமை! கற்பதுவே உன் முதற்கடமை!'' என்ற பாவேந்தரின் வார்த்தைகளை பசுமரத்தாணிபோல மாணவர்களின் மனதில் பதியச்செய்து, பார் போற்றும் நல்லவராக, பொது நலச் சிந்தையில் புடம் போட்டதங்கங்களாக மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஓர் ஆசிரியரின் எழுதுகோல் குனிகிற போதெல்லாம் அங்கே ஒரு தலைமுறை தழைத்தோங்கி தலை நிமிர்ந்து நிற்கும் என்பது முற்றிலும் உண்மை. சமூகநீதி காத்து, சமுதாய ஏற்றத்துக்கான மாற்றத்தையும் மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள். உளிபடாமல், துளி சிதறாமல் எதிர்கால உலகத்தைச் சிரத்தையாய்ச் செதுக்கும் ஆசிரியச் சிற்பிகளுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE