சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் ராஜா விமர்சனம்

By KU BUREAU

சென்னை: வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்து பாஜகதோல்வியை தழுவும் என இந்தியகம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் ராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வியை கொடுத்ததோடு, திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும்வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இதன்மூலம் இந்தியாவுக்கே புதிய நம்பிக்கையை தமிழக மக்கள் கொடுத்திருக்கின்றனர். மக்களவைத் தேர்தல் முடிவு என்பதுபாஜகவுக்கு அரசியல் ரீதியாக தோல்வியை கொடுத்திருக்கிறது. பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அவர்களின் ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது.

ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவும். 125 நாடுகள் கொண்ட பட்டினி குறியீட்டில் 111-வது இடத்தில் இந்தியா உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்,இயக்கங்களை முன்னெடுத்துள்ளோம். வாக்குக்காக தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு பற்றி பேசிய பாஜக, தமிழக மீனவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பாஜகவின் வெளிநாட்டு கொள்கை தோல்வியை தழுவியுள்ளது. சொந்த நாட்டு மக்களின் நலனை பாஜக புறக்கணிக்கிறது. வயநாடு நிலச்சரிவை நேரில் பார்த்த பிறகும் பிரதமர் அதை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

தமிழக ஆளுநரின் கருத்துகள் அபத்தமானவை. கேரள ஆளுநர், டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்களும் தமிழக ஆளுநரை போன்றே செயல்படுகின்றனர். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஆளுநர் பதவி தொடர்பாக மாற்று வழிமுறைகள் கண்டறியப்படும். பாஜக கடைபிடித்த பொருளாதார, சமூக அரசியல் கொள்கைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மறுப்பது கண்டனத்துக்குரியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நலம் பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஆர்.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE