மதுரை வீரன் வரலாறு நூலுக்கான தடையை விலக்கக் கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

By காமதேனு

மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என விளக்கமளிக்குமாறு புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளதாகவும், பல சமூகத்தினரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி, மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்து, புத்தகங்களை பறிமுதல் செய்து 2015ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன், கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், புத்தகத்தில் சாதி ரீதியாக எதுவும் இல்லை என்றும், புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன் மற்றும் தனபால் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், கடந்த 2013ல் புத்தகம் வெளியிடப்பட்ட போது, பொது ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. 2000 புத்தகங்கள் விற்கப்பட்ட நிலையில், தடை குறித்து புத்தக ஆசிரியருக்கு அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பறிமுதல் தொடர்பாக எந்த நோட்டீசும் அளிக்கவில்லை என வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 95வது பிரிவின் கீழ், புத்தகத்தை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின் கீழ் 2 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அரசியல் சாசனம் 226வது பிரிவின் கீழ் ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரிட் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்புகளுடன் விளக்கமளிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


இதையும் வாசிக்கலாமே... HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE