சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது. தேசிய சராசரியைவிட அது கீழே போய்விட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ‘எண்ணி துணிக’ கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ராஜ்ஜியங்கள் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்தனர். பக்திக்காக மட்டுமல்ல, கல்விக்காகவும் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு மக்கள் சென்று வந்தனர்.
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ இளவரசர் 500 பேருடன் பிஹாரின் நாளாந்தா பல்கலைக்கழகத்துக்கு சென்று கல்வி பயின்றார். பின்னர், அவரே ஒரு குருவாக உருவெடுத்து போதி தர்மரானார். யாரும், யாரையும் தடுக்கவில்லை. அதேபோல்தான்ஆதிசங்கரரும் நாடு முழுவதும் பயணித்துள்ளார். ஒருவரும்அவரைத் தடுத்ததில்லை. மாறாகமக்கள் அவரை வரவேற்றனர். நமது கல்வி முறையை ஆங்கிலேயர் அழித்துவிட்டதால் அதன் மகத்துவம் நமக்கு தெரியவில்லை. தற்போதைய அரசியலைக் கொண்டு இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு ராஷ்ட்ரம். ராஷ்ட்ரம் என்பது நாடு என்பதைக் கடந்த ஒன்று.
தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நம் மாநிலம் பல்வேறு துறைகளில் முதன்மையாக இருப்பதற்கு அவர் ஏற்படுத்திய கட்டமைப்பு காரணமாக அமைந்தது. துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்தான் 60 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக உள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.
» உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உண்மையான முயற்சி எடுக்கிறது: ரஷ்ய அதிபர் புதின் கருத்து
» திருத்தணியில் தற்காலிக பணி நீக்கத்தால் டாஸ்மாக் மதுபானக் கடை மேற்பார்வையாளர் தற்கொலை
குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேர்களால் இரட்டை இலக்க எண்ணைக்கூட படிக்க முடியவில்லை. 40 சதவீத மாணவர்களால் அவர்களின் பாடப்புத்தகங்களைகூட வாசிக்க முடியவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு கற்பித்தல் குறைபாடுகளே காரணமாகும். இதையெல்லாமல் கவனிக்காமல் எல்லோருக்கும் எல்லாம்என்ற அடிப்படையில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகள் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்தை உருவாக்குகின்றன. மேலும், மோசமான கற்பித்தலால் சராசரியாக 60 சதவீத மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் பட்டங்களைப் பெற்றாலும், வேலைவாய்ப்பு பெற முடியாத திறனற்றவர்களாக இருக்கின்றனர். கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது.
இதுதவிர, தமிழகம் சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சினை போதைப் பொருள்கள். கஞ்சா மட்டுமின்றி கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப்பொருள்கள் எளிதாக விநியோகிக்கப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் சென்றால், அதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் மணவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.
மாணவர்களைப் பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்கவேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள்கூட,சராசரி வேலை குறித்த கனவையேகொண்டிருக்கின்றனர். தற்போது ஆசிரியர்கள் கண்டித்தால் பெற்றோர்கள் கேள்வி கேட்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர்களின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளித்து பேசியதாவது: பிஎம் பள்ளிகள் என்பது சிறப்பான திட்டமாகும். பள்ளிகள் கட்டமைப்பு வசதிகள், கற்றல் செயல்பாடுகள் மேம்படும். இதன்கீழ் கூடுதல் நிதியும் வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு, மாநிலஅரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்கொண்டு நிதி வழங்குகிறது. இந்ததிட்டத்தில் இணைவதற்கு தமிழகஅரசு முன்பு விருப்பம் தெரிவித்துவிட்டு தற்போது மறுக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அனைவரும்ஏற்க வேண்டும். நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைப் பெற்றுதான் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கும் மாநிலங்களும் தற்போது அதில் உள்ள திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தி வருகின்றன என்றார்