தூத்துக்குடி: வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவ - மாணவியர் துறைமுகத்தில் குவிந்து கப்பல்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது பெயரை தாங்கி நிற்கும் வ.உ.சி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட ஆண்டு தோறும் அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்றும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்தனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் அதிகளவில் வந்தனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
துறைமுகத்தின் கப்பல் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குக் கப்பல்கள், சரக்குப் பெட்டக கப்பல்களைக் கண்டு மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் வியந்தனர். கப்பல்களில் சரக்குகள் ஏற்றப்படுவதையும், கப்பல்களில் இருந்து சரக்குள் இறக்கப்படுவதையும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இதேபோல், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்களையும் மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இருப்பினும் யாரையும் கப்பலுக்குள் சென்று பார்வையிட அனுமதிக்கவில்லை. கப்பல்களுக்கு வெளியே நின்று பார்வையிட்ட மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், செல்போன்களில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
» புதுச்சேரியில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ ஏற்பாடு: 11-ம் தேதி விஜர்சன ஊர்வலம்
» கோவையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை
நீர்மூழ்கி கப்பல்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு நீர்மூழ்கி கப்பல் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மூழ்கி கப்பல் நிறுத்தப்பட்டுள்ள தளத்தில் மட்டும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தத் தளத்தில் கடற்படையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
பொதுமக்கள், மாணவ - மாணவியர் சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், நீர்மூழ்கி கப்பலை யாரும் புகைப்படம் எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் சற்று தொலைவில் இருந்து நீர்மூழ்கி கப்பலை கண்டு ரசித்தனர். பொதுமக்கள், மாணவர்கள் துறைமுகத்தை பார்வையிட வசதியாக துறைமுக அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.