பெரும்பாக்கம் மேம்பால பணிகளை தரமாகவும், விரைவாகவும் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளை பிரிக்கும் பகுதியாக பெரும்பாக்கம் உள்ளது. காஞ்சிபுரம்மாவட்ட எல்லையான பெரும்பாக்கம் வழியாகத்தான் பாலாறு நுழைந்து செவிலிமேடு, வாலாஜாபாத் பகுதி வழியாகச் சென்று, திருமுக்கூடல் பகுதியில் வேகவதி ஆறு, செய்யாற்றை உள்வாங்கி செங்கல்பட்டு மாவட்டத்தில் நுழைந்து மாமல்லபுரம் அருகே வாயலூரில் கடலில் கலக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதியில் பாலாறு நுழையும் இடத்தில் பெரும்பாக்கத்துக்கும் - வடஇலுப்பைக்கும் இடையில் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு தரைப்பாலம் உள்ளது. காஞ்சிபுரம் - ஆற்காடு மார்க்கமாக செல்லும் மக்கள் இந்த தரைப்பாலத்தைத்தான் பயன்படுத்தி வந்தனர். இந்த தரைப்பாலம் பாலாற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் மூழ்கிவிடும். தரைப்பாலத்துக்கு மேல் அதிக உயரத்துக்கு தண்ணீர் சென்றால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.

இதனால் காஞ்சிபுரம் - ஆற்காடு சாலையில் பெரும்பாக்கத்துக்கு அடுத்து உள்ள வடஇலுப்பை, சித்தனக்கல், பிரம்மதேசம், நாட்டேரி, புதூர், அரியூர், பணப்பாக்கம், புதுப்பாடி, குத்தனூர், வெங்காத்தூர், அறிவிடைதாங்கி உட்பட பல்வேறு கிராம மக்கள் பாலாற்றை தாண்டி காஞ்சிபுரம் வர முடியாத சூழல் ஏற்படும். இந்த கிராம எல்லைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தாலும் இவர்களுக்கு காஞ்சிபுரமே அருகில் உள்ளது.

இதனால் விவசாயிகள், மாணவர்கள், பணிக்குச் செல்பவர்கள் என பலரும் காஞ்சிபுரம் வர முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த நேரங்களில் காஞ்சிபுரம் வருவதற்கு சொந்த வாகனங்களில் 15 கி.மீ தூரமும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் 30 கி.மீ தூரமும் சுற்றி வர வேண்டி இருந்தது. அதேபோல் பெரும்பாக்கம் காஞ்சிபுரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் மோட்டார் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்க ஆற்காடு செல்வர். இதுபோல் பல தேவைகளுக்கு ஆற்காடு செல்பவர்களும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இதனால் இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 2021 நவம்பர் மாதத்தில் சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் இரு கரை தொட்டு சென்றது. இந்த வெள்ளப்பெருக்கால் பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பலத்த சேதம் அடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்து போக்குவரத்து போலீஸார் தடை விதித்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். பின்னர் ரூ.50 லட்சம் செலவில் கிராவல் மற்றும் மண் மூட்டைகளை போட்டு அந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் மண் சரிந்து பாலத்தின் அகலம் குறைந்ததால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறின.

இந்நிலையில் பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பெரும்பாக்கம் பாலாற்றில் சுமார் ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வடஇலுப்பை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.ராமஜெயம்கூறியதாவது: பெரும்பாக்கத்தையொட்டி உள்ள பகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் என்றாலும் நாங்கள் அத்தியாவசிய தேவைகள், மருத்துவ உதவிகள்,விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்கு என அனைத்து தேவைகளுக்கும் காஞ்சிபுரம்தான் வருகிறோம்.

இந்தபாலம் வெள்ளத்தின்போது துண்டிக்கப்பட்டால் சுமார் 40-க்கும்மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவர். இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்தபாலத்தை தரமானதாகவும், தாமதமில்லாமலும் அமைப்பதை அதிகாரிகளும், அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் பொறியாளர்களிடம் கேட்டபோது, கடந்த ஜனவரியில்தான் மேம்பாலப் பணிகளை தொடங்கினோம். வரும் ஜனவரி 2026-ல் பணிகளை முடிக்க வேண்டும். தற்போது 30 சதவீத பணிகளை முடித்துள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு 6 மாதத்துக்கு முன்பே பணிகளை முடித்துவிடுவோம். ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணிகள்தான் முக்கிய பணி. தூண்களை அமைத்துவிட்டால் பாலத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று முடிந்துவிடும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE