வத்திராயிருப்பு அருகே மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் சுகாதார வளாகம்!

By KU BUREAU

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கல்யாணிபுரத்தில் மகளிர் சுகாதார வளாகம் மாட்டுத் தொழுவமாக மாறியதால் பெண்கள் சிரமத்தில் உள்ளனர். வத்திராயிருப்பு அருகே கல்யாணிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதனால் அங்கு கால்நடைகளை கட்டி வைப்பதால் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் சூழல் நிலவுகிறது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கல்யாணிபுரத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய சுகாதார வளாகம் கட்ட ஊருக்கு வெளியே இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊருக்கு வெளியே சுகாதார வளாகம் கட்டப்பட்டால், இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த முடியாது. இதனால் புதிய சுகாதார வளாகமும் பயன்பாடின்றி முடங்கும் சூழல் ஏற்படும். பழைய சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், புதிய சுகாதார வளாகத்தை குடியிருப்பு அருகே கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE