கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை பாஞ்சாலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் அடிப்படை வசதிகளின்றி சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் ராயக்கோட்டை 1-வது வார்டுக்கு உட்பட்ட பாஞ்சாலி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சிரமத்தைச் சந்திக்கும் நிலை: இங்குள்ள 200 குடியிருப்புகள் உள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாங்கள் வசிக்கும் பாஞ்சாலி நகரில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். குறிப்பாக, இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி முற்றிலும் இல்லை.
மழைக் காலங்களில் அவதி: இதனால், கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுவதுடன், பல தெருக்களில் தேங்கி நிற்கிறது. சில தெருக்களின் மையப்பகுதியில் பொதுமக்கள் சிறிதாக கழிவுநீர் செல்ல பள்ளம் வெட்டி நீர் தேங்காமல் பராமரித்து வருகின்றனர். இருப்பினும் மழை நேரங்களில் தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல், கழிவு நீருடன் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளைச் சூழ்ந்து, பல நாட்கள் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுப் புழுக்கள் உற்பத்தி அதிகரித்து, சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் பகுதியில் உள்ள சேதமான குடிநீர் குழாய்களில் சாக்கடை கழிவு நீர் கலந்துவிடுகிறது. மேலும், தெரு மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி முழுவதும் இருளில் மூழ்கும் நிலை நீடித்து வருகிறது.
» சிகிச்சைக்கு தொட்டிலில் தூக்கிச் செல்லும் அவலம் - மலைவாழ் மக்களுக்கு விடிவு எப்போது?
» கோவை விமான நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் எண்ணிக்கை 2.79 லட்சமாக பதிவு
ஆய்வு செய்ய வேண்டும்: இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாஞ்சாலி நகர் பகுதியை ஆட்சியர் ஆய்வு செய்து மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.