தேனியில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (செப்.5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் எம்.மகாலிங்கம் தலைமை வகிக்க, நிர்வாக அமைப்புச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநில செயலாளர் கே.காமாட்சி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.அய்யனார் வரவேற்றார். மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் பொன். அமைதி கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

குடிமைப்பொருட்களை சரியான அளவில் எடையிட்டு பொட்டலமாக வழங்க வேண்டும். வெளியூர், வெளிமாவட்ட, வெளி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏதுவாக கூடுதலாக 10 சதவீத பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து குடிமைப் பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ரேஷன்கடைக்கு வரும் பொருட்களை இறக்க கட்டாய இறக்கு கூலி வசூல் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிறப்புத் தலைவர்கள் எம்.பன்னீர்செல்வம், எஸ்.அழகர்சாமி, போராட்டக் குழுத் தலைவர் ஆர்.குருசாமி, போராட்டக்குழு செயலாளர் பி.கே.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் எஸ்.முத்துராயர் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE