மண்சரிவு அபாயம்: போடிமெட்டு மலைச் சாலையில் வாகனங்களை நிறுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடை

By என்.கணேஷ்ராஜ்

போடி: கம்பத்திலிருந்து கேரளா செல்லும் போடிமெட்டு மலைச்சாலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழத் தொடங்கி உள்ளன. ஆகவே இப்பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு ரசிக்கவோ, புகைப்படம் எடுப்பதற்காகவோ கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைப்பாதை உள்ளது. போடி அருகே முந்தல் எனும் இடத்தில் இருந்து இந்த மலைப் பாதை தொடங்குகிறது. 18 கி.மீ தூரம் கொண்ட இச்சாலையின் ஒரு பக்கம் சரிவான பள்ளத் தாக்கும், மறுபக்கம் செங்குத்தான பாறைகளும் அமைந்துள்ளன. 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இப்பாதை 18 அடி முதல் 30 அடி வரை அகலம் கொண்டது. இது சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறுக்குச் செல்லும் முக்கிய சாலையாகும்.

சுற்றுலாப் பயணிகள் இதன் வழியே செல்வதின் மூலம் ஆனையிரங்கல் அணையை ரசிக்க முடியும். அங்கு நீர் அருந்த வரும் யானைகளை கண்டுரசிப்பது, படகுச்சவாரி, பெரியகானல் நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள், படர்ந்து செல்லும் மூடு பனி, தேயிலை தொழிற்சாலைகள் போன்ற பலவற்றையும் இந்த வழியில் பயணிப்போர் கண்டு ரசிக்க முடியும். இதனால் மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த பாதையையே தேர்வு செய்து பயணித்து வருகின்றனர்.

மேலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த வழியில் ஜீப்களில் அதிகளவில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இங்கு மழை பெய்து வருவதால் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஆரம்பித்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் இதனை கண்காணி்த்து அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்வதால் பல இடங்களிலும் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது.

இதனால் பிடிப்புத் தன்மை குறைந்து மண், பாறைகள் சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த மலைப் பாதைக்கு புதியதாக வருபவர்கள் பலரும் பள்ளத்தாக்கின் அழகையும், மலைச் சரிவுகளையும் ரசிப்பதில் ஆர்வம் காட்டுவர். இதற்காக கார்களை ஆங்காங்கே நிறுத்துவதும், புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கம். தற்போது மண் சரிவு அபாயம் உள்ளதால் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது, "சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், எதிர்பாராத நேரத்தில் மண் சரிவு ஏற்பட்டு அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே வாகனங்களை நிறுத்தி பள்ளத்தாக்குகளை ரசிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம். இது குறித்து இவ்வழியே செல்லும் பயணிகளுக்கு முந்தல் சோதனைச் சாவடியில் அறிவுறுத்தப் படுகிறது. மலைப் பாதையை கண்காணித்து வரும் ஊழியர்களும் எச்சரித்து வருகின்றனர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE