குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சி டூ கோவை இரண்டரை மணி நேரத்தில் பறந்த ஆம்புலன்ஸ்

By KU BUREAU

கோவை: திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மாதம் பிரசவ சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 27-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்த போது, இருதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கோவை ஆவாரம்பாளையம் பகுதியி்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.

இதற்காக காவல்துறையினரின் உதவியும் கோரப்பட்டது. காவல்துறையினர், ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் விரைவாக வருவதற்காக ‘கிரீன் காரிடர்’ திட்டத்தின் கீழ் நெரிசலற்ற போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதைத் தொடர்ந்து குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர், மருத்துவப் பணியாளர்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஆம்புலன்ஸை ஒட்டுநர் அஸ்வின் ஓட்டினார். ஆம்புலன்ஸ் வாகனத்துடன் போலீஸ் வாகனமும் வந்தது.

தொடர்ந்து இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. வழக்கமாக திருச்சியில் இருந்து கோவை வருவதற்கு 4 முதல் நான்கரை மணி நேரம் ஆகும். ஆனால், சிகிச்சைக்காக குழந்தையை விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆம்புலன்ஸில் அழைத்து வந்த ஓட்டுநர் அஸ்வினை மருத்துவர்கள், காவல்துறையினர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE