மாநாட்டுக்கு இடம் கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார்; விஜய்யை பார்த்து அஞ்சுகிறது திமுக: தமிழிசை விமர்சனம்

By KU BUREAU

சென்னை: மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன். முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் சிலகருத்துகளை பரிமாறிக் கொண்டேன். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின், அங்கு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவதையே பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிய அளவில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு ஓரளவு முதலீடுகள் வருவதற்குகூட, பிரதமர் மோடி மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நல்லெண்ணம்தான் காரணம்.

ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததற்கு மத்திய அரசு காரணம் என தவறான கருத்தை பதிவு செய்கின்றனர். பள்ளிக்கல்வி துறைக்கான 90 சதவீத நிதியை மத்திய அரசு கொடுத்துவிட்டது. முந்தைய தலைமைச் செயலர், பிஎம் திட்டத்தைசெயல்படுத்துவதாக கூறி அதற்கான நிதியை வழங்குங்கள் என்றார். தற்போது, அந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கின்றனர். இதில் முழுக்க தவறு செய்தது திமுகதான்.

திமுக அரசால் கார் பந்தயத்தைநடத்த முடிகிறது. ஆனால், மாநாடு நடத்தவிடாமல் விஜய் கட்சியை முடக்குகிறது. மாநாட்டுக்கு இடம்கொடுப்பதில் என்ன பிரச்சினை, மாநாட்டுக்கான இடத்தை விஜய்தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார். விஜய் மேல் திமுகவுக்கு ஏன் அவ்வளவு பயம். மாநாட்டுக்கு இடம் கொடுத்தால், மடத்தை பிடித்துவிடுவார் என்று திமுக பயப்படுகிறது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் வருவதால், எதிர்க்கட்சிகளை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால், எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது, முடக்கிவிட வேண்டும் என நினைக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு மொழி படிக்க அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. ஆனால், நம் நாட்டில் உள்ள இன்னொரு மொழியை படிக்கவிடாமல், அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை நசுக்குகிறது. எல்லா துறையிலும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை எங்களை போன்றவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஸ்டாலின் எனது பாதுகாப்பையும், பிரேமலதா பாதுகாப்பையும் நீக்கிவிட்டார். ஆனால், பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பெண் டிஎஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE