அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்... சூர்யா சிவா ஆவேசம்!

By கரு.முத்து

பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும் என கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா, திமுகவில் இருக்கும் போது அடிதடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கியதால் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதன் காரணமாக திமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

அப்போது தனது தந்தை திருச்சி சிவா, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக பிரமுகர்களையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததன் காரணமாக பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவியும் அவருக்குக் கிடைத்தது. அண்ணாமலைக்கு மிக நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அண்ணாமலைக்கு கட்சிக்குள்ளும், வெளியேயும் தேவையான சில அரசியல் விஷயங்களை இவர் செய்து கொடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு அணியின் தலைவர் டெய்சி சரண் என்பவரிடம் திருச்சி சூர்யா சிவா தொலைபேசியில் உரையாடிய மிரட்டல் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கினார் அண்ணாமலை.


கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும் என்று அப்போது அண்ணாமலை தெரிவித்திருந்தார். டெய்சி சரண் விவகாரத்தில் அப்போதே இருவரும் சமரசம் செய்து கொண்டு விட்டனர். ஆனாலும் அண்ணாமலை அதை ஏற்காமல் அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார்.

கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும் என்று அப்போது அண்ணாமலை தெரிவித்திருந்தார். டெய்சி சரண் விவகாரத்தில் அப்போதே இருவரும் சமரசம் செய்து கொண்டு விட்டனர். ஆனாலும் அண்ணாமலை அதை ஏற்காமல் அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சூர்யா சிவா, அண்ணாமலை சொல்லும் விஷயங்களை செய்து கொடுத்தார். இந்த நிலையில் தன்னை மீண்டும் கட்சியில் இணைக்குமாறு சூர்யா சிவா தொடர்ந்து அண்ணாமலையிடம் கேட்டு வந்தார். ஆனால் அது நடக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சூர்யா சிவா, தற்போது பொங்கி எழுந்திருக்கிறார். அண்ணாமலை குறித்து தனது வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் உரையாடினோம். "கட்சிக்கும் அண்ணாமலைக்கும் இதுவரையிலும் உண்மையாக இருந்தேன். கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களையும், அண்ணாமலை சொல்லும் காரியங்களையும் உடனுக்குடன் முடித்துக் கொடுத்தேன். ஆனால் அவர் சுயநலத்திற்காக மட்டுமே என்னைப் போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். என்னை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட அவர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கட்சிக்கான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடவும், தன்னை முன்னிலைப்படுத்துவதையும், தன்னை வளர்த்துக் கொள்வதிலுமே அவரது கவனம் செல்கிறது. இதனை என்னைப் போன்றவர்கள் உணர்ந்து கொண்டு விட்டோம், கட்சியின் டெல்லி தலைமையும் விரைவில் உணர்ந்து கொள்ளும். அவரது பொய் பிம்பம் விரைவில் உடைந்து நொறுங்கும்" என்றார்.

தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE