கல்விக் கட்டணம் பிரச்சினை: மருத்துவக் கல்லூரியில் சேரும் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடாததால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளித்ததுடன் மருத்துப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என கடந்த ஆண்டு புதுவை அரசு அறிவித்தது. இந்த நிலையில், நடப்பாண்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹேயில் அரசுப் பள்ளிகளில் படித்து 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்த 33 பேரில் 14 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இடம் கிடைத்தோர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்றபோது கல்விக் கட்டணம் கட்டினால் மட்டுமே மருத்துவம் படிக்க அனுமதிப்போம் என்று தெரிவித்ததால் தவிப்புக்கு உள்ளாகினர்.

கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் என்பதால் அதற்குள் பிரச்சினை தீர்ந்து கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இன்னமும் தவிப்பில் உள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இப்பிரச்சினை தொடரக் காரணம் கல்விக் கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடாததுதான்.

இதுபற்றி புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறுகையில், "பத்து சதவீதம் இடஒதுக்கீடு பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக்கான படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்பதற்கான எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை. இதனால் தான் கடந்தாண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை சேர்க்க மறுத்து மாணவர்களை மருத்துவம் படிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பின.

இதனால் புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டோம். கல்லூரி நிர்வாங்களிடம் பேசி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் புதுவை அரசே செலுத்தும் ஆகவே அரசு பள்ளி மாணவர்களை கட்டணம் இல்லாமல் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். அதன் அடிப்படையில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் கல்வி கட்டணம் வாங்கவில்லை என்றாலும் கூடுதல் கட்டணமாக ரூ.1.8 லட்சம் கேட்டனர். கொடுக்க மறுத்தவர்களிடம் கூடுதல் கட்டணத்தை நாங்கள் கட்டி விடுகிறோம் என்று கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெற்று கொண்டு மாணவர்களை மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர்.

அதன் பிறகு கூடுதல் கட்டணம் கட்டினால் மட்டுமே முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் தேர்வு எழுத அனுமதிப்போம் என்று கூறி ஹால்டிக்கெட் கொடுக்க மறுத்து மாணவர்களையும் பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அப்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தந்தோம்.

அதேபோல் இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்களில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்றவர்களிடம் கல்லூரிகளில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தினோம். சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரி அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அரசாணையை வெளியிட்டால் இந்தப் பிரச்சினைக்கே வேலை இருக்காது” என்று நாராயணசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE