திடீரெனத் திமிலோகப்பட்டது தேமுதிக அலுவலகம். வரிசையாக வண்டிகளில் வந்திறங்கிய தொண்டர்கள், ‘ஆற்றல்மிகு அண்ணி வாழ்க!’, ‘மானமிகு மச்சான் வாழ்க!’, ‘வீரமிகு விஜயபிரபாகரன் வாழ்க!’ என தொண்டைத் தண்ணீர் வற்ற வாழ்த்தொலி எழுப்பினர். கட்சி அலுவலகத்துக்கு எதிர் திசையில் கடைபோட்டுப் பிழைத்துவந்தவர்கள், விஜய்காந்த் படத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு விவசாயம் பார்த்து வந்தவர்கள் என ‘ஓய்வுபெற்ற’ தொண்டர்கள் பலர், கட்சி எனும் ‘சப்ஜெக்ட்’டுக்கு உயிர் வந்துவிட்டதில் உள்ளபடியே உவகை அடைந்திருந்தனர்.
உள்ளே... தம்பி சுதீஷ், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் எனக் கட்சியின் ‘உயர்மட்டக் குழு’வுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ‘நிரந்தரப் பொருளாளர்’ பிரேமலதா. “போன தடவை அவங்ககூட அலையன்ஸ் வச்சதுல எந்த ‘லாப’மும் இல்லை. டெபாசிட் தொகையும் போனதால டெஃபிசிட் டிஃபரன்ஸ் எகிறிடுச்சு” என்று சுதீஷ் சொல்ல, “ஆமாமா. இந்தத் தடவை ‘இவங்க’கூட அலையன்ஸ் பேசலாம். ஏக்கர் கணக்குல எம்எல்ஏ-க்களை வாங்கிப்போடுற இந்தக் கட்சிகூட இணக்கமா இருந்தா எலெக்ஷன் ரிசல்ட் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம்” என்று விஜய பிரபாகரன் விளக்கினார்.
“கலைஞர் மகன்கிட்ட ஆரம்பிச்சு கரு.நாகராஜன் வரைக்கும் கட்சி வித்தியாசமில்லாம நாம பேச்சுவார்த்தை நடத்துறதா பேச்சு எழுந்திருக்கு. நாம யார்கிட்ட பேசுறோம்ங்கிறதை நம்மளைவிட ஜாஸ்தியா பேசிட்டு இருக்காங்க ஃபேஸ்புக் பிரஜைகள்” என்று சுதீஷ் வருத்தப்பட்டார்.
“எல்லாம் சரி. ஆனா… ஒரே நேரத்துல ரெண்டு கட்சிக்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துறதை இந்த தடவையாச்சும் அவாய்டு பண்ணலாம். ஒரு மணி நேரம்(!) கழிச்சுக்கூட இன்னொரு கட்சிகிட்ட பேசலாம். போன தடவை துரைமுருகனால ஒரே தொயரமாப் போச்சு” என்று சங்கடப்பட்டார் சண்முகப் பாண்டியன்.
இவற்றையெல்லாம் இறுகிய முகத்துடன் கேட்டபடி இருந்த பிரேமலதா, “இருங்க… இருங்க. ஒரு முக்கியமான ‘கால்’ வர வேண்டியிருக்கு. இப்பெல்லாம் ஊழல் புகார் ஆவணங்களையே பெட்டிப் பெட்டியா எடுத்துட்டுப் போறாங்க... கவனிச்சீங்களா? ஆக, இந்தத் தடவை கெட்டிக்காரத்தனமா இருந்தா நல்ல நல்ல விளைவுகள் ஏற்படும்னு தோணுது. இதுல கோட்டைவிட்டோம்னா ‘விளைவுகள்’ மோசமா இருக்கும்” என்று எச்சரித்தார்.
“நீங்க சொல்றது சரிதான்க்கா. இருந்தாலும் பாலிடிக்ஸுல பழகிப்பார்க்க ஆசைப்படுற ‘தளபதி’ தரப்பை எடுத்த எடுப்புலேயே நீங்க இப்படி தாக்கியிருக்க வேண்டாம். நாளப் பின்ன அவங்களும் ஒரு கட்சியா வளர்ந்து, நம்மகூட கூட்டணிக்கு வாய்ப்பு வந்தா நமக்குத்தானே ‘நஷ்டம்’?” என்று சுதாரிப்பாகப் பேசினார் சுதீஷ்.
அழைப்பு வரப்போவது அறிவாலயத்திலிருந்தா, கமலாலயத்திலிருந்தா எனக் காத்திருந்த உயர்மட்டக் குழு, டெல்லியிலிருந்து ‘கால்’ வந்திருப்பதாக உதவியாளர் ஒருவர் சொன்னதும் உற்சாகத்தில் துள்ளியது.
“ஜீ ஹா(ங்)! நான்தான் பேசுறேன். கேப்டனைக் கேட்டதாச் சொல்லுங்கோ. தேசபக்தி டயலாக்ஸை எனக்கு முன்னாடியே எக்கச்சக்கமாப் பேசுனது விஜயகாந்த் ஜிதான். அதனாலே, அவர் மேலே எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு” என்று பேச ஆரம்பித்த ‘அவர்’, “இப்ப பார்லிமென்ட்ல பேசுறதைவிடவும் பார்ட்னர் பார்ட்டிஸ்கிட்ட பேசுறதுதான் நல்லதுன்னு நாக்பூர்ல இருந்து சொன்னாங்க. அமித் ஷா ஆசிர்வாதத்தோட அண்ணாமலை வாக்கிங் வார் ஆரம்பிக்கப்போறார். ஏற்கெனவே உங்களை இன்வைட் பண்ணிட்டாலும், ரிமைண்ட் பண்ணலாம்னு ரிங் பண்ணினேன்” என்றார்.
அதன் பின்னர் ஆங்கே ஓர் அமைதி குடிகொண்டது. அரை நிமிட அமைதியைக் குலைக்கும் வகையில் அடுத்த கால் வந்தது - அமெரிக்க அதிபரிடமிருந்து!