திருப்பூரில் தொடங்கியது 3 நாள் சர்வதேச பின்னலாடை கண்காட்சி - சிறப்பு என்ன?

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் பழங்கரையில் ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 3 நாள் 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இன்று (செப். 4) துவங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில், ஆடை உற்பத்தியில் இயற்கைக்கு கேடு உண்டாக்காத ஆடைகள் தயாரிப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரும் வகையில், கண்காட்சி அமைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், விருந்தினர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஏ.சக்திவேல் கூறியதாவது: "பூமியை பாதுகாக்கும் வகையில், ஆடை உற்பத்தியில் மாசை குறைத்து திருப்பூர் தொடர்ந்து இயங்கி வருகிறது. வெளிநாட்டை சேர்ந்த 40 பையர்கள் வர உள்ளனர். அதேபோல் இதுவரை இல்லாத வகையில் மெக்சிகோ நாட்டில் இருந்தும் இந்த கண்காட்சிக்கு வருகிறார்கள். செயற்கை நூலிழை ஏற்றுமதி உள்ளிட்ட எதிர்க்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த கண்காட்சியை விரிவாக திட்டமிட்டு அமைத்துள்ளோம். உலக அளவில் திருப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது" என்று சக்திவேல் கூறினார்.

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசும்போது, "உற்பத்தியில் பசுமையை பிரதானமாக கொண்டு திருப்பூர் இயங்கி வருகிறது. ஏற்றுமதியை போலவே உள்நாட்டு உற்பத்தியிலும் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. ஆடை உற்பத்தியில் தொடர்ந்து கிரீன் டிரெண்ட் என்பதை நோக்கி செயல்படுகிறது. பின்னலாடைத் தொழிலில் 80 சதவீதம் கடுமையாக உழைக்கிறார்கள். பெண்கள் ஆற்றலில், இந்தியாவுக்கு வழிகாட்டும் தொழில்நகராக திருப்பூர் உள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த பையர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

புதிய ஜவுளிக் கொள்கையில் மதிப்புள்ள பல்வேறு புதிய தொழில் சங்கிலி பிணைப்புகள் இருக்கும். இங்கிருந்து யாரும் தொழிலை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. அந்தளவுக்கு இங்கு தொழில் முன்னேற்றம் மற்றும் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த தொழிலை தமிழ்நாடு அரசு அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும், உறுதுணையாக இருக்கும்." என்று தர்மேந்திர பிரதாப் கூறினார்.

இந்த கண்காட்சி நாளை (செப். 4) மற்றும் நாளை மறுதினம் (செப்.5) ஆகிய 2 நாட்கள், காலை 10 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE