உதாசீனப்படுத்தப்படுகிறாரா முன்னாள் அமைச்சர் தமிழரசி?

By இரா.மோகன்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தென்காசியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவியான தமிழ்செல்வி, ‘’முக்கிய பதவியில் இருக்கும் எனக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. இதில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு’’ என பொதுவெளியிலேயே போட்டுடைத்தார். இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபனை பதவி நீக்கம் செய்திருக்கிறது திமுக.

இதையும் சிவகங்கை மாவட்ட திமுக நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பேசும் சிவகங்கை திமுகவினர், “இங்கேயும் கிட்டத்தட்ட அதே நிலைதான்... ஆதி திராடவிடர் நலத்துறையின் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை தொகுதி எம்எல்ஏ-வுமான தமிழரசிக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். எந்த வழியிலெல்லாம் அவரை உதாசீனப்படுத்த முடியுமோ அந்த வழியில் எல்லாம் உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கே.ஆர்.பெரியகருப்பன்

2006 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் தனி தொகுதியில் நின்று வென்று அமைச்சரானவர் தமிழரசி. அடுத்த தேர்தலின் போது சமயநல்லூர், தொகுதி மறு சீரமைப்பில் காணாமல் போய்விட்டதால் அவரை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனி தொகுதியில் நிறுத்தியது திமுக தலைமை. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி வந்து போட்டியிட்டதை அப்போதே சிவகங்கை திமுகவில் ஒரு சாரார் அவ்வளவாய் ரசிக்கவில்லை. அதனால் ஏகப்பட்ட உள்குத்து வேலைகளை அரங்கேற்றி தமிழரசியை தோற்கடித்தார்கள்.

இதனால் 2016-ல் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா செல்வியை மானாமதுரையில் நிறுத்தியது திமுக. செல்வியாலும் ஜெயிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் 2021-ல் தமிழரசியே மானாமதுரைக்கு வேட்பாளராகி நின்றார்; வென்றார். இருந்தபோதும், மாவட்டச் செயலாளரான கே.ஆர்.பெரிய கருப்பனுக்கு அமைச்சர் பதவி தரவேண்டிய கட்டாயம் இருந்ததால் தமிழரசிக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிட்டாமல் போனது.

ஆனாலும் சோர்ந்துவிடாமல் மானாமதுரை தொகுதிக்கு தன்னாலான காரியங்களைச் சாதித்துக் கொடுத்து வருகிறார் தமிழரசி. மாவட்டத்தில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பெரியகருப்பனுக்கு சமமாக பங்கேற்று வருகிறார். ஆனால், அமைச்சருக்கு நிகராக இவரும் வலம் வருவதை கட்சிக்குள்ளேயே ஒருசிலர் ரசிக்கவில்லை. திமுக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் தமிழரசி, அமைச்சர் பெரியகருப்பனுக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற தேவையற்ற அச்சமும் அதில் சிலருக்கு இருக்கிறது.

இப்படி தமிரசிக்கு எதிராக அணி திரளும் திமுகவினர் சிலர், கட்சிக்கு புதிய வரவான அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியை அனைத்து விஷயத்திலும் முன்னிலைப் படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அடுத்தமுறை தமிழரசிக்கு இங்கு சீட் இல்லை தற்போது மானாமதுரை நகர்மன்ற தலைவராக இருக்கும் மாரியப்பன் கென்னடி தான் அடுத்ததாக மானாமதுரை திமுக வேட்பாளர் என்று பெரியகருப்பன் ஆதரவாளர்கள் சிலர் இப்போதே பேச ஆரம்பித்திருப்பது தனிக் கதை.

பெரியகருப்பனுடன் மாரியப்பன் கென்னடி...

அமமுக வரவான மாரியப்பன் கென்னடியை முன்னிலைப்படுத்தும் பெரியகருப்பனின் ஆதரவாளர்கள், மானாமதுரை தொகுதிக்குள் நடக்கும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்கூட தமிழரசிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க தயங்குகிறார்கள். இதை பெரியகருப்பனும் தட்டிக்கேட்டு தவறை திருத்துவதில்லை என்பதுதான் தமிழரசி தரப்பின் தீராத ஆதங்கம்.

இந்த நிலையில், பெரியகருப்பன் ஆதரவாளர்கள் ஒருபக்கமும் தமிழரசி விசுவாசிகள் ஒரு பக்கமும் தனித்தனியாக ரகசிய கூட்டங்களை நடத்தி ஒருதரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் மாறி மாறி குற்றச்சாடுகளை அடுக்கி தலைமைக்கு புகார்களை அனுப்பி வருவதாகவும் சொல்கிறார்கள்.

இப்படி மானாமதுரை தொகுதிக்குள் முன்னாள் அமைச்சர் தரப்பும் இந்நாள் அமைச்சர் தரப்பும் நடத்திக் கொண்டிருக்கும் போட்டி அரசியலால் தொகுதி மீண்டும் அதிமுக கைக்குப் போய்விடுமோ என்ற அச்சம் நடுநிலை திமுகவினர் மத்தியில் நிலவுகிறது. இது தொடர்பாக மாரியப்பன் கென்னடியிடம் முதலில் பேசினோம்.

மாரியப்பன் கென்னடி

“நீங்கள் கூறுவது போன்று கட்சிக்குள் மோதல் எதுவுமே இல்லையே” என்று மறுத்தவர், ”முன்பு அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தேன். அம்மாவின் மறைவுக்கு பின் ஒரு குழப்பான சூழல் அதிமுகவில் நிலவியது. அந்தக் குழப்பம் எனக்குள்ளும் இருந்தது. அந்த நேரத்தில்தான் திமுக என்னை அழைத்து ஒரு வாய்ப்புக் கொடுத்தது. அதற்கு விசுவாசமாக திமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சர் பெரியகருப்பன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து செயலாற்றி வருகிறார். வேறு மாவட்டத்தை சேர்ந்தவர் இங்கு வந்து எம்எல்ஏவாகி கட்சியை பைபாஸ் செய்ய நினைப்பது தேவையில்லாதது. மாவட்டச் செயலாளராக உள்ள அமைச்சருடன் எம்எல்ஏ (தமிழரசி) தான் அனுசரித்துப் போக வேண்டும். அப்படிப் போயிருந்தால் இதுபோன்ற தேவையற்ற பேச்சுகள் வந்திருக்காது.

எம்எல்ஏ-வும் தொகுதிக்கென உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகள் தலைமைக்குத் தெரியாமல் இருக்காது. இது போன்ற சூழலில் என்னை முன்னிறுத்துவதாக கூறப்படுவது தவறான செய்தியாகும். இப்படியெல்லாம் பனிப்போர் ஏற்பட வாய்ப்பளிக்காத வகையில் நான் ஒதுங்கியே இருக்கிறேன். முன்னாள் அமைச்சரான அவருக்கு மேலிட செல்வாக்கு அதிகம். ஆனால் நானோ, திமுகவை பொறுத்தமட்டில் சப்-ஜூனியர். எனவே கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவதில் எல்லாம் உண்மை இல்லை. கட்சியை வளர்க்க எல்லோரும் இணைந்துதான் உழைத்து வருகிறோம்’’ என்றார்.

தமிழரசி

இது குறித்து தமிரசியிடமும் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே ‘’அப்படியெல்லாம் எதுவும் இல்லையே” என மறுத்த அவர், “நான் என்னுடைய பணிகளில் சரியாக இருக்கிறேன். அவர் (மாரியப்பன் கென்னடி) நகராட்சி பணிகளை செய்து கொண்டிருக்கிறார். எனது பணியை நான் சரியாகத்தானே செய்கிறேன்?’’ என எதிர் கேள்வி எழுப்பியதுடன், ‘’எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

ஆனால், தமிழரசி ஆதரவாளர்களோ, “கட்சிக்கட்டுப்பாட்டை மதித்து தமிழரசி உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச தயங்குகிறார். ஆனால், அவருக்குள் நிறைய இருக்கிறது பேசுவதற்கு. அவை அனைத்தையும் பேச வேண்டிய இடத்தில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்; என்றாவது ஒரு நாள் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில்” என்கிறார்கள்.

நம்பிக்கை பலிக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE