கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் பகுதியில் செண்டுப்பூ கிலோ ரூ.10-க்கு விற்பனையாவதால், விவசாயிகள் பூக்களை பறிக்காமல் அப்படியே செடிகளில் விட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பாசி, கம்பு, உளுந்து ஆகிய தானிய வகைகளுக்கு அடுத்தப்படியாக விவசாயிகள் செண்டுப் பூ பயிரிட்டு வருகின்றனர். இதில், சிலோன் காலனி, கீழமுடிமண், குலசேகரநல்லூர், ஓசனூத்து, ஆரைக்குளம், கீழமங்கலம், அக்கநாயக்கன்பட்டி, பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகமாக செண்டுப்பூ பயிரிட்டு வருகின்றனர். இந்தப் பூக்களை கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.
தற்போது தூத்துக்குடி சந்தையில் அதிகமாக ஓசூர் மற்றும் ஆலங்குளம் பகுதியில் இருந்து செண்டுப்பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் செண்டுப்பூ விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சந்தையில் இன்று செண்டுப் பூ விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செண்டுப் பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில்,"விவசாய காலங்களில் விளைநிலங்களில் நெல், உளுந்து, பாசி மற்றும் தானிய வகைகள் பயிரிடுவோம். மற்ற மாதங்களில் குறுகிய பயிரான செண்டுப் பூ பயிரிடுவோம். செண்டுப் பூ கடந்த மாதம் வரை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையானது.
» கரடி, சிறுத்தை நடமாட்டத்தால் பணிக்குச் செல்ல முடியாமல் தவிப்பு: குன்னூர் மக்கள் அச்சம்
» செப்டம்பர் 10-ல் வேலை நிறுத்தப் போராட்டம்: டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு முக்கிய முடிவு
தற்போது ஆலங்குளம் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து செண்டுப் பூ வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரையே விற்பனையாகின்றன. விலை குறைவால் பூப்பறிக்கும் வேலை ஆட்களுக்கான சம்பளம்கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம். இதனால் சில விவசாயிகள் செடிகளில் இருந்து பூக்களைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்" என்று விவசாயிகள் கூறினார்.