ம.பியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்பால் பாஜக அதிர்ச்சி!

By காமதேனு

மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை( நவ.17) தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிச. 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 230 சட்டசபை தொகுதிகளில் 116 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் தாமரை மலர்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார்.

இந்நிலையில்தான் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காங்கிரஸை தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனவும், எந்த கட்சியை ஆட்சியில் அமைத்தாலும் நூலிழை அளவில் தான் எம்எல்ஏக்களின் வித்தியாசம் என்பது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளன.

பாஜக பிரச்சாரம்

இந்நிலையில் LokPoll சார்பில் மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 72,405 பேரிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதாவது மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத ஓட்டுகளைப் பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக 39 முதல் 41 சதவீத ஓட்டுக்களுடன் 84 முதல் 98 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்றவர்கள் 8 முதல் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE