உதகையில் காவல் துறையின் மலிவு விலை உணவகம் மீண்டும் திறப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் காவல்துறை சார்பில் பி1 காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மலிவு விலை உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் ‘ஹில்காப் கபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டன. உதகை பி1 காவல் நிலையம் அருகிலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் தாவரவியல் பூங்கா அருகிலும் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களை காவல்துறை ஆயுதப்படைப் பிரிவில் உள்ள காவலர்கள் நடத்தி வந்தனர்.

இங்கு மலிவு விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டதால், காவல்துறை மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும், குறுகிய காலத்தில் இந்த உணவகங்கள் வரவேற்பு பெற்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பி1 காவல்நிலையம் மற்றும் தாவரவியல் பூங்கா அருகில் செயல்பட்டு வந்த உணவகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், இந்த உணவகங்களை திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பி1 காவல்நிலையம் அருகில் உள்ள உணவகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர், உணவு தரமாக வழங்க வேண்டும் என அங்கு பணிபுரியும் காவலர்களிடம் அறிவுறுத்தினார். கூடுதல் எஸ்பி-யான சவுந்திர ராஜன், டிஎஸ்பி-க்கள் பி.யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் நிஷா,"மூடப்பட்ட மலிவு விலை உணவகம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் தொடர்ந்து செயல்படும்" என்று கண்காணிப்பாளர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE