கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி சார்பில், தமிழகத்தில் முதன் முறையாக ரூ.5.80 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு மாடி வாரச்சந்தை அமைக் கப்பட உள்ளது. கொடைக்கானல் கவி தியா கராஜர் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது.
சந்தையில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் என 200-க்கும் மேற்பட்டோர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோரம் சந்தை அமைக்க அனுமதி இல்லாத போதும், வாரச்சந்தையில் இடப் பற்றாக்குறை காரணமாக பலரும், சாலையோரங்களில் கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபடு கின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க, வாரச் சந்தையை மேம்படுத்த நகராட்சியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் முதன் முறையாக மலைப் பகுதியில் ரூ. 5.80 கோடி செலவில் வாகன நிறுத்தும் வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன், இரண்டு அடுக்கு மாடி வாரச் சந்தை கட்டப்பட உள்ளது.
தரைத்தளத்தில் வாகன நிறுத்தம், முதல் மற்றும் 2-வது தளத்தில் காய்கறி சந்தை செயல்படும். வாரச்சந்தை கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.