“வாக்கு எண்ணும்போது இருமுறை சரிபார்க்க வேண்டும்” - முகவர்களுக்கு கோவை ஆட்சியர் அறிவுரை

By இல.ராஜகோபால்

கோவை: "வாக்கு எண்ணும் பணியின்போது பணியாளர்கள் ஒரு முறைக்கு, இரண்டு முறை சரிபார்த்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்" என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கோவை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி, ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் இன்று (மே 23) நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: "மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட கோவை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசினர் தொழில் நுட்ப கல்லூரியிலும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கானவை பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுளள்ளது. வாக்கு எண்ணும் பணியின் போது ஒரு முறைக்கு, இரண்டு முறை சரிபார்த்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பதிவான வாக்குகள் விவரத்தை உரிய படிவங்களில் சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையினை அறிவிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் மொபைல் போன்கள் கொண்டுவர அனுமதியில்லை. வாக்கு எண்ணும் பணியில் புதியதாக பணியாற்ற இருபவர்கள் இந்த பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தேகங்கள் இருந்தால், அவற்றை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

சரியான நேரத்திற்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வர வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE