பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் அவரை இனி 28 பைசா மோடி என்றுதான் அழைப்போம் என்று தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை என்று மாநிலத்தை ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதற்கு பாஜக தரப்பில் தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் பிரதமரால் கொண்டு வரப்பட்டுள்ளது, போதுமான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று பதில் தரப்படுகிறது. பிரதமர் மோடியும் "கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ரூ.120 லட்சம் கோடியை தந்துள்ளோம்.
2014-க்கு முன் தமிழகம் பெற்ற நிதியை விட கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதல் நிதியை அளித்துள்ளோம்" என்று தமிழ்நாட்டில் பேசும் போது பிரதமர் குறிப்பிட்டார். ஆனாலும் தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்படும் வரிப் பணத்திலிருந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை மத்திய அரசு திருப்பி வழங்கவில்லை என்று திரும்பத் திரும்ப முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஒரு செங்கல்லை வைத்தார். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். தமிழ்நாடு வழங்கும் வரிப்பணம் ஒரு ரூபாயில் மத்திய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. எனவே மோடியை இனி 28 பைசா மோடி என்றே அழைப்போம்" என்று பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை நேரடியாக மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.