சாகர் கவாச்: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை!

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: இன்று காலை தமிழக கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை துவங்கிய நிலையில், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை, பாதுகாப்பு துறையினராலும், காவல்துறையினராலும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோர காவல் படை, சட்டம் - ஒழுங்கு போலீஸார், குற்றப்பிரிவு போலீஸார் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே, அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் சுமார் 10 ஆயிரம் ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, முக்கியமான சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. 32 மணி நடைபெறும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இரண்டாவது நாளாக நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE