அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு

By கி.மகாராஜன்

மதுரை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, அங்கித் திவாரி தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையின் பேரில் அங்கித் திவாரி மார்ச் 25 முதல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இதனிடையே, ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரி அங்கித் திவாரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'வயதான பெற்றோரை கவனிக்க வேண்டியதுள்ளது. தினமும் கையெழுத்திட திண்டுக்கல் நீதிமன்றம் செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' எனக் கோரியிருந்தார் திவாரி.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். இதனால் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி இங்கு மனு தாக்கல் செய்ய முடியாது. ஆகவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

இதையேற்க மறுத்த நீதிபதி, ''அங்கித் திவாரி தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. மனுதாரர் வாரம் ஒரு நாள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE