அந்தப் பெரியவரின் மன வலி மார்க்கண்டேயன் சிவகுமாருக்கு தெரியுமா?

By குள.சண்முகசுந்தரம்

நேற்றிலிருந்து மீண்டும் நடிகர் மார்கண்டேயன் சிவகுமார் ஊடகத் துரத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். திரும்பிய பக்கமெல்லாம் அவருக்கு கண்டனங்கள் தெறிக்கின்றன. நானும் அந்த காணொலியைப் பார்த்தேன். 82 வயதைக் கடக்கும் சிவகுமாருக்கு ஏன் இத்தனை கோபம் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் முன்பு இதுமாதிரி கோபம் வரும். எதற்காகத் தெரியுமா? தனது காலில் யாராவது விழுந்தால் கெட்ட கோபம் வரும் அவருக்கு. காலில் விழுந்த நபரை கொத்தாகப் பிடித்து கூட்டத்துக்குள் விசுவார். அவரால் அப்படி வீசப்பட்ட நபர்கள், “கையா அது... இரும்புப் பிடிங்க” என்று அனுபவம் சொன்னதை நானும் கேட்டிருக்கிறேன். அதுகூட, யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை. எதற்காகவும் யாரும் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் வந்த கோபம் தான்.

ஆனால், சிவகுமாருக்கு வந்தது எந்தக் காரணமும் இல்லாதது. இதற்கு முன்பு, செல்ஃபி எடுக்க வந்த தனது ரசிகன் ஒருவரின் செல்போனை ஆவேசமாக தட்டிவிட்டு உடைத்தார் சிவகுமார். அது கிளப்பிய கண்டனத்தைப் பார்த்த பிறகுதான் சிவகுமாருக்கு, ‘தான் அப்படிச் செய்திருக்கக் கூடாதோ’ என்று உள்ளுக்குள் உறைத்தது. அதனால் அந்த ரசிகருக்கு தனது செலவில் செல்போன் வாங்கிக் கொடுத்து சமாளித்தார்.

அதைக்கூட அந்த ரசிகர் தன்னை தொல்லை செய்ததற்காக அப்படிச் செய்ததாக எடுத்துக் கொள்ளலாம் சிவகுமார். ஆனால், செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெரியவர் தனது அபிமானத்துக்கு உரியவருக்கு சால்வை அணிவித்து தனது அன்பைக் காட்ட நினைத்ததை அப்படி எடுக்க முடியாது.

சிவகுமார்

பொதுவாக செட்டிநாட்டு மக்கள் விருந்தோம்பலுக்கு பேர் போனவர்கள். அன்புக்கு கட்டுண்டவர்கள். உண்மையிலேயே சால்வை போர்த்துவதை விரும்பாத புரட்சியாளராக இருந்தால் மேடையில் ஊதாச்சட்டை தம்பி ஒருவர் போர்த்திய சால்வையையும் அப்படி உதறித் தள்ளி இருக்க வேண்டும். மேடை நாகரிகம் கருதி அதை அன்போடு ஏற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தவரின் பொறுமை அந்தப் பெரியவர் விஷயத்தில் எங்கே போனது?

இத்தனைக்கும் அங்கே நூற்றுக் கணக்கில் சால்வைகளை வைத்துக் கொண்டு யாரும் சிவகுமாருக்காக க்யூவில் காத்திருக்கவில்லை. நின்றது அவர் ஒருவர் தான். அவரிடம் சால்வையை வாங்கிக் கொள்ள அதிகபட்சம் ஒரு மணித்துளிகூட ஆகியிருக்காது. சால்வைகளை தூக்கி எறிவதும் செல்போனை தட்டிவிடுவதும் சிவகுமாருக்கு வேண்டுமானால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், அன்போடு போர்த்த வந்த சால்வையை பறித்து வீசியதால் சால்வையைக் கொண்டு வந்த நபர் அடைந்த மன வலியையும் பொதுவெளியில் அவர் பட்ட அவமானத்தையும் சிவகுமாருக்கு உணர்த்துவது யார்?

இனி அந்தப் பெரியவர் யாருக்காக சால்வை எடுத்தாலும் சிவகுமாரின் கோபமும் அவர் வீசி எறிந்த சால்வையும் தானே நினைவில் வரும். சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் நயந்த பேச்சாளருமான சிவகுமாருக்கு இதெல்லாம் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். யோகா செய்தால் கோபம் வராது என்று சொல்லிவிட்டு தினமும் யோகா செய்யும் சிவகுமாருக்கு இப்படி கோபம் வரலாமா என நாக்கு மீது பல்லுப் போட்டு பலரும் பேசுகிறார்கள். இது யோகாவின் குற்றமா அல்லது சிவகுமாரின் குற்றமா என்பது போல் இருக்கிறது அவர்களின் இந்தக் கேள்வி.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் தன்னைவிட இரண்டு வயது இளையவரான சினிமா இயக்குநர் பழ.கருப்பையாவின் காலில் தொப்பை மடிய விழுந்து வணங்குகிறார் சிவகுமார். அது தேவையில்லை என்பது எனது கருத்து. அப்படியே அதை ஆமோதித்தாலும் அந்தப் பணிவையும் பொறுமையையும் மேடைக்கு வெளியே தன்னை போற்றி மகிழ வந்த அந்த பெரியவரிடமும் சிவகுமார் காட்ட மறந்தது ஏன்?

ஒன்றே ஒன்றுதான் சிவகுமார்... சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில், கைதட்டினால் எனக்கு காது வலிக்கும் என்று சொல்லி கைதட்டியவர்களின் கன்னத்தில் நீங்கள் ஓங்கி அறைந்திருந்தால் இன்றைக்கு இத்தனை புகழ் உச்சத்தில் நீங்கள் இருந்தீருப்பீர்களா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். ரசிகர்கள், அபிமானிகள் என்றாலே சினிமாக்காரர்களுக்கு தொல்லை தான். ஆனால், அது அன்புத் தொல்லை. 82 வயதாகியும் இது உங்களுக்குப் புரியாமல் போனது ஆச்சரியம் தான்!

டெய்ல் பீஸ்: கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்ததும் வழக்கம் போல மன்னிப்புக் கோரி இருக்கிறார் சிவகுமார். “எனக்கு சால்வை போர்த்த வந்தவர் எனது ஐம்பது ஆண்டு கால நண்பர் கரீம். எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது என்று தெரிந்தும் சால்வையுடன் நின்றது அவர் தப்பு என்றால் அதை வாங்கி எறிந்ததும் என்னுடைய தப்புத்தான். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சிவகுமார்.

இனியாவது சிவகுமார் பொது இடங்களில் பொறுமை காக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE