சசிகலா இல்லம் கோயில்; கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்... அடிச்சுத் தாக்கும் ரஜினி!

By காமதேனு

ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் முடிந்துவிட்ட நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ல் அங்கு குடியேறினார் சசிகலா.

கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில்...

இந்த நிலையில், அதே போயஸ்கார்டன் பகுதியில் வசிக்கும் ரஜினி காந்த் யாரும் எதிர்பாராத விதமாக சசிகலாவின் இல்லம் சென்று அன்பளிப்புக் கொடுத்து அவருடன் அளவளாவிவிட்டு வந்தார். அத்துடன், நேற்று மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்

சசிகலா வீட்டில் ரஜினிகாந்த்...

சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக முக்கியஸ்தர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களோடு நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது, அவர் காரை விட்டு இறங்கியதுமே ஓடோடி வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதேபோல, “ரஜினிகாந்த் எங்கேப்பா?” எனக் கேட்டு, அவரை தன்னருகே அழைத்து அமரவைத்துக் கொண்டார் ஸ்டாலின்.

ஸ்டாலினுடன் ரஜினி...

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''கருணாநிதி நினைவிடம் மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் அற்புதமாக உள்ளது. கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு அருமையாக உள்ளது'' என குறிப்பிட்டார்.

சசிகலாவின் புதிய இல்லம் சென்ற போது, “வீட்டை கோயில் மாதிரி கட்டி இருக்கிறீர்கள்” என பாராட்டினார் ரஜினி. அதேபோல், கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால் மாதிரி உள்ளதாக பாராட்டி இருக்கிறார். அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் விலகினாலும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்தை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கிறார்கள். அவரும் யாருக்கும் பொல்லாப்பு வேண்டாம் என்பதாக, அழைக்கும் இடத்துக்கெல்லாம் அசராமல் சென்று வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE