“தமிழகத்தில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை” - முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்

By பெ.ஜேம்ஸ் குமார்

செம்பாக்கம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராத திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செம்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (செப்.03) மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை வகித்தார். மேற்கு மாவட்டக் செயலாளரும் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி செயலாளர் இரா.மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பா.வளர்மதி பேசியதாவது: “திமுக அரசுக்கு எதிராக தமிழகத்திலே அதிகமான போராட்டங்களை நடத்தியது செங்கல்பட்டு மேற்கு மாவட்டமாகும். தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கொஞ்சம் கூட மாறாமல் மெத்தனப்போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றது. அதிலும் மண்டலம் 3ல் எந்த பணியும் நடைபெறுவதில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றி தருவதில்லை. குறிப்பாக அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் அப்படியே போடப்பட்டுள்ளன. இங்குள்ள பூங்காக்கள் சரியாக பராமரிக்காமல் இருப்பதனால் சமூக விரோதிகளின் புகலிடமாக காட்சியளிக்கின்றன.

மு.க.ஸ்டாலின் தமிழகத்தை நினைத்து பார்ப்பதில்லை. மாறாக அவரது தந்தை கருணாநிதிக்கு சிலை வைப்பதும், தெருக்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பதிலும்தான் ஆர்வமாக இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை ஏழை எளிய மக்கள் தெருக்களில் படங்களை வைத்து வணங்கி அவர்களின் புகழை பேசுகிறார்கள். ஆனால் கருணாநிதியின் படத்தை வைப்பதற்கே திமுக கட்சிக்காரர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் ஜெயலலிதாவை நேசிக்கிறார்கள்.

தமிழகத்தில் போதை புழக்கம் தலைவிரித்தாடுகிறது என்று ஒவ்வொரு நாளும் பொதுச் செயலாளர் பழனிசாமி சொல்லிக்கொண்டேதான் வருகின்றார். எங்கே இந்த அரசு கேட்கிறது? அதன் விளைவுதான் இன்றைக்கு இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் பயிலும் மாணவர்களிடம் போதை மருந்து இருப்பதாக சோதனை நடத்தினார்கள். அதன் விளைவு கூடுவாஞ்சேரியில் போதை மருந்து விற்பவர் ஒருவர் பிடிபட்டார்.

அந்த அளவிற்கு தமிழகம் சட்டம் ஒழுங்கில் மோசமாக உள்ளது. உலகத்திலே சிறந்த காவல்துறை என பெயர் பெற்ற தமிழக காவல்துறை இன்றைக்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் விளைவு இன்றைக்கு ஒரு பெண் காவலர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை. பொதுமக்கள் எப்படி பாதுகாப்புடன் இருப்பார்கள். இந்த திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வருகின்றது. ஆனால் ஒன்று நிச்சயம், கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டங்களை மீண்டும் முதல்வராக பழனிசாமி வரும்போது நிச்சயம் நிறைவேற்றுவார்” இவ்வாறு வளர்மதி இவ்வாறு பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE