சென்னை: திமுகவின் சட்டப்பிரிவு, இலக்கிய அணி, தொழிலாளர் அணி நிர்வாகிகளை, சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்ததுடன், அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வகையில் தேர்தலுக்கு இப்போதே தயாராக அறிவுறுத்தினர்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் நிலையில், திமுக சார்பில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் ததென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார். குழு அமைத்த மறுநாளே முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற குழுவினர், அன்றே கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, திமுகவின் ஒவ்வொரு அணியினரையும், மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்கவும், தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று திமுக சட்டத்துறை நிர்வாகிகளிடம் சட்டத்துறையின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, மக்கள் நலன் சார்ந்தும், திமுக தொண்டர்கள் நலனுக்காகவும் சட்டத்துறை எடுத்து வரும் பணிகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, இலக்கிய அணி நிர்வாகிகளை சந்தித்து, கருணாநிதி நூற்றாண்டை முன்னி்ட்டு இலக்கிய அணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், தமிழ்வளர்ச்சி, தமிழ் சான்றோரின் உயர்வுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஒருங்கிணைப்பு குழுவினர் விவாதித்தனர். அதன்பின், திமுக தொழிலாளர் அணியின் நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.
» பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» அனகாபுத்தூரில் அனுமதியின்றி வைத்த நடிகர் விஜய்யின் 20 அடி கட் அவுட் அகற்றம்
இதுகுறித்து, குழுவினர் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘திமுக சட்டப்பிரினருடனான சந்திப்பின் போது, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வாக்குச்சாவடி முகவர்கள் பணிகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் சார்ந்த பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கு தற்போதிலிருந்தே தயாராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வழங்கப்பட்டது.
தொழிலாளர் அணியினரிடம் தொழிலாளர் நலனுக்காக அரசு 3 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை இன்னும் வேகமாக தொழிலாளர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். அதிகப்படியான தொழிலாளர்களை திமுக ஆதரவாளர்களாக உருவாக்க களப்பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
தொழிலாளர் அணியின் சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திமுக தலைவர் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.