அருப்புக்கோட்டை பரபரப்பு முதல் மேற்கு வங்க அதிரடி மசோதா வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் என்பவரை மர்ம நபர்கள் 5 பேர் சரமாரியாத் தாக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து காளிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், இறந்தவரின் உறவினர்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி-யான காயத்ரி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் டிஎஸ்பி காயத்ரியை தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், போலீஸாரும் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை கண்டித்து திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த எஸ்பி-யான கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். டிஎஸ்பி தாக்கப்பட்டது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், டிஎஸ்பி-யான காயத்ரி மீது தாக்குதல் நடத்திய ராமநாதபுரம் அருகே உள்ள நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர்.

மேலும், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வீரசூரன், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

“மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கே அதிக பயன்” - “மேகேதாட்டு அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும்,” என சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்: பெங்களூருவில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது தான் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மாணவி வழக்குடன் சேர்த்து இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2 வார கால விசாரணைக்குப் பிறகு, நிதி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன் : ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ வெப் தொடரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர்களை வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது இந்த வெப் சீரிஸ். 1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்.5-ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் இம்மாதம் 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்ட நிலையில், விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்: ராமதாஸ் கண்டனம்: ‘முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

தமிழக வீராங்கனைகளுக்கு குவியும் வாழ்த்துகள்: பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீசிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற நிலையில், அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு - மேற்கு வங்கத்தில் மசோதா: பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்புக்கு இணங்க, அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த மசோதாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். அதேநேரத்தில், இந்த மசோதாவில் சில திருத்தங்களை அவர் முன்வைத்தார். எனினும், அந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மசோதா மீதான விவாதத்தை அடுத்து செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதனையடுத்து, இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்களின் செயல்களால், பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ அல்லது உடல் ரீதியாக முடக்கப்பட்டாளோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE