ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இரட்டை குடியுரிமை பெற்று சேரவிருந்த 9 மாணவர்கள் நீக்கம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இரட்டை குடியுரிமை பெற்று சேர இருந்த 9 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் கூறியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளது. இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆண்டு இறுதியில் புதுச்சேரிக்கு பணியிடமாறுதல் பெற்று வந்து, புதுச்சேரி குடியுரிமையை பெற்று தங்கள் பிள்ளைகளை ஜிப்மரில் உள்ள புதுச்சேரி மாணவர்களுக்கான கோட்டாவில் சேர்த்து, புதுச்சேரி மாணவர்களுக்கான இடத்தை தட்டிப் பறிக்கின்றனர்.

அதன்படி இந்தாண்டு இரட்டை குடியுரிமை பெற்ற 9 பேர் ஜிப்மரில் சேர்ந்தனர். இது தொடர்பாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆளுநர், முதல்வர் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதனடிப்படையில் ஜிப்மரில் புதுச்சேரி மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 9 மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 250 மாணவ - மாணவியர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மாணவ - மாணவியர் 64 பேர் கோட்டாவில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இம்முறை விதியை மீறி இரட்டைக் குடியுரிமை பெற்ற 9 பேர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களால் புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் 9 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. விதிமீறி இரட்டைக் குடியுரிமை மூலம் 9 பேர் சேர்க்கப்பட்டது குறித்து துணை நிலை ஆளுநர், முதல்வர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது விதிமுறை மீறி ஜிப்மரில் சேர இருந்த 9 பேர் நீர்க்கப்பட்டுள்ளனர். அந்த 9 இடங்களில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மாணவர்கள் சேர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக துணை நிலை ஆளுநர், முதல்வருக்கும் புதுச்சேரி மாநில மாணவர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று புதுச்சேரி மாநில மாணவர்களின் இடங்கள் பறிபோய்க் கொண்டிருந்தது. அவை முழுமையாக நீக்கப்பட்டு இன்று 64 மருத்துவ இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வழிவகை செய்து கொடுத்த மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.

கடந்த ஆண்டு வெளி மாநிலத்தவர் இருவர் இதுபோல் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடத்தை பறித்துக் கொண்டனர். மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் புதுச்சேரிக்கு பணியாற்ற வந்தால் குடியுரிமைச் சான்று தர மறுக்க முடியாது. அதே சமயம் ஜிப்மரில் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பெற 5 ஆண்டுகள் புதுச்சேரியில் வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளோம்.

வரும் ஆண்டுகளில் புதுச்சேரி குடியுரிமையை மட்டும் பார்க்காமல் அவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக புதுச்சேரியில் வசித்துள்ளனரா என்றும் பார்த்தே ஜிப்மர் மருத்துவ சேர்க்கை இடங்களை வழங்கும். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான முதல்வரின் மருத்துவ உதவித் திட்டத்துக்கான கோப்பு துணை நிலை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தடையில்லாச் சான்று பெறுவது அவசியம்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அரசு ஊழியர்கள் தவிர்த்து அனைத்து மக்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறையில் இருக்கும்" என்று இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE