தஞ்சாவூர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மணியரசன் கூறியதாவது: "காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வந்திருக்கக்கூடிய பேராபத்து குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சிப்காட் என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எல்லாம் தொழிற்சாலை மண்டலங்களாக, ரசாயன மண்டலங்களாக மாற்றி, வேளாண்மையை முற்றிலுமாக அழிக்க கூடிய திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்மொழிந்து செயல்படுத்தி வருகிறது. திருச்சியில் ஏற்கெனவே தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நிலையில் அங்கு சிப்காட் அறிவித்துள்ளனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் கரையாப்பாலூர், திருத்துறைப் பூண்டி அருகே கொற்கையில் சிப்காட் அமைக்கவுள்ளனர். எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக கொண்டு வரப்பட்ட ஆணையை மீறி, பெரும் தொழில் மண்டலமாக மாற்றும் வேலையில் தான் தமிழ்நாடு அரசு தற்போது இறங்கியுள்ளது.
இந்த சிப்காட்டில் வேளாண் சார்ந்த தொழில் கொண்டுவரப்படும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை, எந்தத் தொழிற்சாலை வந்தாலும் அனுமதி வழங்கப் போகிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொடங்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
» தமிழக மக்களிடம் மன்னிப்பு: மத்திய அமைச்சர் ஷோபா உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
» குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் இடிபாடு: சாலை துண்டிக்கப்படும் அபாயம்
விவசாயிகள் இங்கே விவசாயம் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், 2 லட்சம் கன அடி காவிரியில் வந்தபோது அதனை கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிட்டு, காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவு தண்ணீரை திறந்தனர். அந்த தண்ணீரும் இதுவரை ஏரி, குளங்களுக்கு சென்று சேரவில்லை. விவசாயம் செய்யக்கூடாது என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம். அந்த விவசாயத்தை மீறி செய்கிறார்களே என்கிற எண்ணத்தில் தான் வெள்ளம் வந்த காலத்தில் தண்ணீரை முறையாத திறந்துவிடவில்லை.
இதை எதிர்த்தும், சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம். தமிழக முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள முதலாளிகளை தேடி இங்கு தொழில் தொடங்க கொண்டு வருகிறார். இங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது, எனவே சிப்காட் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக பாதுகாக்கப்பட வேண்டும். கர்நாடகாவில் மேகேதாட்டில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில விவசாய சங்கங்கள் ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி வருகின்றன. ராசி மணல் அணை கட்டினால் வலது கரை கர்நாடகவுக்கும், இடது கரை தமிழ்நாட்டுக்கும் சொந்தமாகும். ஆனால், இதில் கர்நாடகாவின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் போது தமிழகத்துக்கு போதிய நீர் கிடைக்காது.
ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முன்னெடுத்தார் எனக் கூறப்படுகிறது. அப்போது கர்நாடகாவில் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி போன்ற அணைகள் எல்லாம் இல்லை. அப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றினால் கர்நாடகா உபரி நீரைக்கூட தமிழகத்துக்கு விடாது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் எல்லாம் ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது, கர்நாடகாவில் மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பணிகளை நடைபெறுவதை தமிழக அரசு ஒரு வல்லுநர் குழு அமைத்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இது குறித்து கோரிக்கை விடுத்தால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதில் கூறி வருகிறார். எனவே, காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்டக்கூடாது. அதே நேரத்தில் தமிழகத்தில் காவிரியில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீரை தேக்கி பயன்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்" என்று மணியரசன் கூறினார்.
இக்கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் சாமி.கரிகாலன், மணிமொழியன், சிமியோன் சேவியர் ராஜ், கலைச்செல்வம், துரை.ரமேஷ், சுந்தர வடிவேலன், ராமலிங்கம், நா.வைகறை, பழ.ராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.