அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பயணி உயிரிழப்பு 

By சி.கண்ணன்

சென்னை: அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அந்தமான் பெண் பயணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 174 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கணவருடன் பயணம் செய்த தெற்கு அந்தமானைச் சேர்ந்த சபித்ரி (50) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

விமான கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். சென்னையில் விமானம் தரையிறங்கியதும், தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் சென்று சபித்ரியை பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீசார், சபித்ரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE