சிட்கோ கட்டிடங்கள் அனுமதி பிரச்சினை: கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம் 

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள சிட்கோவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கான அனுமதியை தங்களது ஊராட்சியிலேயே பெற வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சிட்கோ அமைப்பதற்காக குலசேகரபுரம் ஊராட்சி எல்லைக்குள் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்தது. சிட்கோவுக்கான அனுமதி வேண்டி கேட்டபோது குலசேகரபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிட்கோவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை குலசேகரபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பார்வையிட அமைச்சர் ஐ.பெரியசாமி வருவதாக இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு அமைச்சரிடம் முறையிட வந்தனர். ஆனால், அமைச்சரின் வருகை ரத்தானதால், சிட்கோ கட்டிடங்களுக்கு தங்களது ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை ஊராட்சி மன்ற தலைவர் சி.முரளிதரன் தலைமையில் கிராம மக்கள் அங்குள்ள காளியம்மன் கோயில் வளாகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் அ.லெனின்குமார் கூறும்போது, ''குலசேகரபுரம் ஊராட்சி மாலில் அமைக்கப்பட்ட சிட்கோவுக்கு எங்கள் ஊராட்சியில் அனுமதி பெற்று விட்டு, அதில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெறவேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். லிங்கம்பட்டி என்பது குலசேகரபுரம் அருகே உள்ள மற்றொரு ஊராட்சி. ஆனால், வருவாய்த்துறை கணக்கின்படி எங்களது கிராமம் லிங்கம்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ளது. இதனை வைத்து அரசு அதிகாரிகள் குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சிட்கோ கட்டிடங்கள் கட்டுவதற்கு லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி கேட்க கூறுகின்றனர்.

இதனால் எங்களது ஊராட்சியின் வருவாய் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைக்கப்படும் சிட்கோவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எங்களது ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி தான் நாங்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE