கோவை: ஜவுளித்தொழில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நேரில் சந்தித்து மனு அளித்த தொழில்துறையினரிடம் ‘இதுகுறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், மின்கட்டணம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச உதவுவதாகவும்,’ நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளாளர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது:“கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு இன்று வருகை தந்த நீலகிரி எம்.பி, ஆ.ராசாவை, ‘ஓஸ்மா’ சங்கத்தின் துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் பாரதி, சுரேஷ்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். ஜவுளித்தொழில் துறையில் மூலப்பொருட்களான பருத்தி, பாலிஸ்டர், விஸ்கோஸ் மற்றும் கழிவு பஞ்சு ஆகியவை மற்ற நாடுகளை விட ஒரு கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை அதிகம் உள்ளது. இதனால் தொழிலில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். பருத்தி விளைச்சல் ஏக்கருக்கு 1,000 கிலோ வரும் வகையில் புதிய விதைகளை உருவாக்கி அரசு விநியோகிக்க வேண்டும். பாலிஸ்டர், விஸ்கோஸ் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு நிபந்தனைகளை நீக்க வேண்டும்.வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளி பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவையில் பேசி பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்கட்டணம் தொடர்பாக தமிழக முதல்வருடன் சந்திப்பு நடந்த உதவி செய்வதாக ஆ.ராசா உறுதி அளித்தார். அவருடனான சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
» இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.28 கோடி ‘சாரஸ்’ போதைப் பொருட்கள் பறிமுதல்
» டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.3.75 கோடி மோசடி - மதுரையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது