‘டாஸ்மாக்’ கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு @ ராமநாதபுரம் 

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே நாடார்வலசை மதுக் கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது பிரியர்கள் ஆட்சியரின் மக்கள் குறைதீரக்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே நாடார்வலசை கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அக்கடையில் பனைக்குளம் மற்றும் 10 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்துகின்றனர். அப்பகுதியில் அமர்ந்து மது அருந்துபவர்கள் தகாத வார்த்தையால் பேசுவது, அரை நிர்வாணமாக படுத்திருப்பது உள்ளிட்டவற்றால் அவ்வழியாக செல்லும், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதனால் அந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என நாடார்வலசையைச் சேர்ந்த கிராம மக்கள், ஏராளமான பெண்கள் திரண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ராமநாதபுரம் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று (செப்.2) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், நாடார்வலசையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் வந்த 5 பேர் மனு அளித்தனர்.

இதுகுறித்து முதியவர் சுப்பிரமணியன் கூறும்போது, “நாடார் வலசை கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நம்பி 10-க்கும் மேற்பட்ட கிராம மதுப்பிரியர்கள் உள்ளனர். அந்த கடைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இருப்பதால் மதுப்பிரியர்களுக்கு வசதியாக உள்ளது. அக்கடையால் பொதுமக்கள் யாருக்கும் இடையூறும் இல்லை. இருப்பினும் சிலர் மகளிர் அமைப்புகளை தூண்டிவிட்டு மது கடையை இடமாற்றம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

அந்த மதுக் கடையை இடமாற்றம் செய்தால் மதுபிரியர்கள் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள பெருங்குளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்றால் சாதி பிரச்சினை, அடிதடி ஏற்பட்டு, எங்கள் ஊரைச் சேர்ந்த மது பிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் நிலை ஏற்படும். எனவே நாடார்வலசை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டாம். மேலும் இந்த கடையை அகற்றினால் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும்,” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE