மழை வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா, ஆந்திரா! - தெலங்கானாவில் பெய்த கனமழை மற்றும் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார். இரண்டு மாநிலங்களிலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
» 5 ஆண்டுக்கு முந்தைய குற்றங்களின் ஃபைல்களை தோண்டும் மதுரை போலீஸ் - பின்னணி என்ன?
» சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
உ.பி.யில் தொடரும் ஓநாய்கள் தாக்குதல்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்களின் அண்மைய தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்து, மூவர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் திங்கள்கிழமை அதிகாலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும் கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என ஒன்பது பேர் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
‘வாழை’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: ‘உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!’ என்று வாழை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கூடாது’ - விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.
‘செபி’ தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: ‘செபி அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மதாபி பூரி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார். ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இதன்மூலம், செபி அமைப்பின் விதி 54-ஐ அவர் மீறியுள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரும் முதலீடு செய்யும் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் பணியை செபி மேற்கொள்கிறது. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அடங்கிய குழுவால் செபி தலைவர் நியமிக்கப்படுகிறார். விதிகளை மீறி செயல்பட்டுள்ள செபி தலைவர் மதாபி பூரி புச் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
‘கொள்கையை விட்டுத்தர மாட்டோம்’ - அன்பில் மகேஸ்: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்காக நாங்கள் பணம் கேட்கவில்லை. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துக்காகத் தான் பணம் கேட்கிறோம். எனவே, இதையும் அதையும் முடிச்சுப்போடாமல், தயவுகூர்ந்து நிதியை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்டோமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற மாட்டோம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: தமிழகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வாக்காளர் விவரங்களை கொண்டு இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இஸ்ரேலில் மக்கள் போராட்டம்: காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவுக்கு 2-வது தங்கம்: பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் திங்கள்கிழமை பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட இந்திய வீரர் நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21 என்ற செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தினார். பாரிஸ் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 9 பதக்கங்கள் வசமாகியுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி தவெக மாநாடு: காவல் துறை 21 கேள்விகள்: விக்கிரவாண்டியில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை அனுப்பி இருக்கிறது. மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?
மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவிருக்கும் நபர்களின் பெயர் விவரம்? மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் விவரம் என்பது உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.