உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

By காமதேனு

கனமழை மற்றும் அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டுமென 27 மாவட்டங்களுக்கு வருவாய்துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

மழை

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அளித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக தமிழக வருவாய் துறை, '' பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என 27 மாவட்டங்களுக்கு அவரச கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE