புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கிய முதல்வர்! 

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் மற்றும் மாஹேயில் அரசுப் பள்ளிகளில் படித்து 10 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பித்த 33 பேரில் 14 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

புதுவையில் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் போன்ற நீட் அடிப்படையிலான படிப்புகளுக்கு முதல்கட்ட கணினி கலந்தாய்வுகளை நடத்தி சென்டாக் சீட் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மாஹேயில் உள்ள ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் 41 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லுாரியில் 41 பேருக்கும், மாஹே அறிவியல் கல்லூரியில் 34 பேருக்கும், வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் 35 பேருக்கும் பல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 127 பேருக்கும், பிம்ஸில் 56 பேருக்கும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 91 பேருக்கும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 90 பேருக்கும் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன. ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்த 33 மாணவ - மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்வி வட்டாரத்தில் விசாரித்தபோது, "அரசு பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த 33 பேரின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டதில், 10 நபர்களின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மாணவ - மாணவியரின் விண்ணப்பங்களில் 8 விண்ணப்பங்கள் நீட் நிர்ணயித்த கட்-ஆஃப் மதிப்பெண்ணிற்கும் குறைவாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எஞ்சிய 14 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்" என்றனர்.

தேர்வு செய்யப்பட்ட 14 மாணவ - மாணவியருக்கு (புதுச்சேரி-10: காரைக்கால்-2; மாஹே-2) முதல்வர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் இன்று சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் கல்வியமைச்சர் நமச்சிவாயம், அரசுச் செயலர் ஜவஹர், பள்ளி கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி, உயர்கல்வி இயக்குநர் அமன் ஷர்மா ஆகியோர் இருந்தனர்.

சேர்க்கை கடிதத்தை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வரும் 5-ம் தேதி மாலை 6 மணிக்குள் சேர வேண்டும். இடம் கிடைத்த மாணவர்கள் சென்டாக் வங்கிக் கணக்கில் கட்டணம் செலுத்தலாம். கட்டணத்தை கல்லூரிக்கு சென்டாக் நிர்வாகம் அனுப்பும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை. அவர்களின் கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை செலுத்தும். மேலும் உதவிக்கு 0413 2655570, 2655571 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE