‘இந்தப் பேட்டியை இத்தோட முடிச்சிக்கலாம்!’ - எகிறிய எடப்பாடி பழனிசாமி

By சானா

அன்றாடம் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு (மாநில!) ஆளுங்கட்சியை அதிரவைக்கும் கேள்விகளை அள்ளி வீசும் ஜெயக்குமார், அதிமுக அலுவலகத்தை நோக்கி ஆவலுடன் சென்றுகொண்டிருந்தார்.வழியில்,‘இன்றைய ஸ்பெஷல் தக்காளி சாதம்: விலை ரூ.999 – ஜிஎஸ்டி வரிகள் தனி’ என்று எழுதப்பட்டிருந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை (!) தாண்டும்போது சற்றே ‘ஜெர்க்’கான ஜெயக்குமார், “நம்ம ஜி ஆட்சியில இப்படியெல்லாம் நடக்கக் கூடாதுதான். இருந்தாலும் கூட்டணி தர்மம், அமலாக்க மர்மம் எல்லாம் இருக்கிறதால, திமுக அரசுதான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்லிடலாம்” என்று தீவிரமாகத் தீர்மானித்துக்கொண்டார்.

‘இண்டியா’ மீட்டிங்குக்குப் போட்டியாக நடந்த என்டிஏ மீட்டிங்கில் வலதுசாரி பிரதமரின் வலது பக்கத்தில் அமரவைக்கப் பட்டபடியால், தேசிய அரசியலில் பேசப்படும் தலைவராகிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஜாலியாக வந்த ஜெயக்குமாரைப் பார்த்ததும், “இன்னிக்குப் பேட்டியில ஏட்டிக்குப் போட்டியா என்ன சொல்லப்போறாரோ?” என்று லேசாகத் துணுக்குற்றார்.

“தலைவரே… மணிப்பூர் பிரச்சினையில ஆரம்பிச்சு தக்காளி விலையேற்றம் வரைக்கும் ஸ்டாலின் அரசுதான் காரணம்னு ஸ்ட்ராங்கா எடுத்துச் சொல்லப்போறேன். மணிப்பூர்ல ஒரு தொகுதியிலகூட திமுக ஜெயிக்காதுன்னும் சொல்லப்போறேன்” என்று ஜெயக்குமார் சொல்ல, எதையோ விபரீதமாக உணர்ந்த எடப்பாடி, “இருங்க… நானும் வந்துர்றேன்” என்றார்.

எடப்பாடியாரின் இருபுறமும் முன்னாள் அமைச்சர்கள் அடக்கமாக நின்றிருந்தனர். திடீரென அனைவருக்கும் காய்கனி மாலைகள் போடப்பட்டன. ஜெயக்குமாருக்குத் தக்காளி மாலை போடப்பட்டபோது, “இன்னிக்காவது தக்காளி சாதம் செய்யச் சொல்லி வீட்டுல கேட்டுடலாம்” என்று உள்ளூற உவகையடைந்தார்.

செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.

“சார், என்டிஏ மீட்டிங்ல பிரதமர் மோடிகிட்டே என்னென்ன பேசுனீங்க?” என்று ஒரு செய்தியாளர் கேட்க, “மோடி ஜி அப்பப்போ இந்தியில என்னென்னவோ சொன்னாரு. விடியா திமுக கொள்கையால இந்தி படிக்காம விட்ட தப்பை அப்பத்தான் கூடுதலா உணர்ந்தேன். இருந்தாலும் ‘மோடி என்ன சொன்னாலும் நல்லதாத்தான் சொல்வார்’ங்கிற நம்பிக்கையில அவர் சொல்றதுக்கெல்லாம் சந்தோஷமாத் தலையாட்டிட்டு இருந்தேன்.

திட்டங்களை ‘அமலாக்கு’றதுல ஐநாவுக்கே வழிகாட்டுற அமித் ஷா வேற இருந்ததால (!) நான் அதிகம் பேசலை. ஆனா, தமிழகத்துல நாங்க சொல்றதைத்தான் அவங்க கேட்கணும். அதுல மாற்றம் இல்லை” என்று அண்ணாமலையாரை மனதில் நினைத்துக்கொண்டு அறுதியாகச் சொன்னார் எடப்பாடி.

“உங்களுக்கு இடதுபுறத்துல ஓரமா ஒரு கட்சித் தலைவர் நின்னுட்டு இருந்தாரே... அவர் யார் சார்? விக்கிபீடியாவுல கூட அவரைப் பத்தி விவரம் போடலையே?” என்று ஒரு செய்தியாளர் கேட்க, “அவர் யார்னு அமித் ஷாவுக்கும் தெரியலையாம். ஆனாலும், லோகத்துக்கே வழிகாட்டும் மோடி ஜியோட கரத்தை வலுப்படுத்த ராகுல் காந்தியே வந்தாலும் சேர்த்துக்குவோம்.

அதையெல்லாம் விடுங்க... கூட்டணிக் கட்சிகளை அடிமை மாதிரி நடத்தாம... ஆளுயர மாலையை ஆளுக்கொரு மூலையில பிடிக்க வச்சு மோடி ஜிக்குப் போட வச்ச அந்தப் பெருந்தன்மைக்கே ஆயிரம் நன்றி சொல்லலாம். இதெல்லாம் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில சாத்தியமா சொல்லுங்க” என்று எடப்பாடி படபடத்தார்.

“ஆனாக்கா… எம்.பி தேர்தல் வெற்றி செல்லுமான்னு உறுதியாத் தெரியாத ஓபிஆரையும் அதிமுக எம்பியா அங்கீகரிச்சு அனைத்துக் கட்சிக் கூட்டத்துல உட்கார வச்சிருந்தாங்களே?” என்று ஒருவர் கேட்டதும், “இந்தப் பேட்டியை இத்தோட முடிச்சிக்கலாம்” என்று தமிழருவி மணியன் பாணியில் எகிறினார் எடப்பாடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE