விழுப்புரம் உட்பட 5 ரயில் நிலையங்களில் ‘பசுமை பூங்கா’ அமைக்க முடிவு

By KU BUREAU

சென்னை: விழுப்புரம் உட்பட 5 ரயில் நிலையங்களின் வளாகங்களில் பசுமை பூங்கா அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே தனியார் பங்களிப்போடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சோலார் மின்உற்பத்தி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏற்கெனவே 30 ரயில்நிலையங்களில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் உட்பட 5 ரயில் நிலையங்களில் ‘பசுமைபூங்கா’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து வணிகபயன்பாடு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்கள் மற்றும் அதன் வளாகங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை போற்றும் வகையில், சிறிய பசுமை பூங்கா, பூச்செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், பயனுள்ள இதரதாவரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, திருச்சி ரயில்கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம், அரியலுார், திருவண்ணாமலை, போளூர், விருத்தாசலம் ஆகிய 5 ரயில் நிலையங்களின் வளாகத்தில் பசுமை பூங்காஅமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனங்களை தேர்வுசெய்து, பணி ஆணை வழங்கிய அடுத்த 3 மாதங்களில் பணிகளை முடிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE