அரசின் விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு: அமைச்சர் அன்பரசன் பெருமிதம்

By KU BUREAU

சென்னை/ஆலந்தூர்: உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக மாரத்தான் போட்டி ஆலந்தூரில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் மருத்துவர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர் நீதிமன்றம் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது 5 கி.மீ. தூரம் வரை நடத்தப்பட்டது. உள்வட்டச் சாலை வழியாக வேளச்சேரி ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் தொடங்கப்பட்ட நீதிமன்றம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரை உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாநில மருத்துவர் அணித் தலைவர் கனிமொழி சோமு எம்.பி. ஆகியோர் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் காரணமாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்போர் விகிதம் 54-ல் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. 6 மாத காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்போர் 48-ல் இருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதமாக உயர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல் உடல் உறுப்புதானம் என்பது உயிர் தானமாகும். ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளால் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். 2008-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் மூளைச்சாவு உறுப்பு மாற்றுச் சிகிச்சை முறை தொடங்கப்பட்டது.

இப்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதல்வரின் உத்தரவின்பேரில் 27 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டு, இப்போது 40 மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி 2008 - 2024 ஜூலை வரை 1,929 கொடையாளிகள் கொடுத்த 6,995 முக்கிய உறுப்புகளும், 4,439 திசுக்களும் தானமாகப் பெறப்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும் அவரது துணைவியாரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE