ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

By காமதேனு

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதே போல் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களும் ஏராளமான அளவில் உள்ளன. இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் 3.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி மருத்துவ பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 9,566 நபர்களுக்கு பரிசோதனை முழுமை பெற்றுள்ளது. இதில் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ”புற்றுநோயை பொருத்தவரை முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை, 4ம் நிலை என்று பல்வேறு விதங்கள் உள்ளது. 3வது, 4வது நிலைகள் உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இறப்பு உறுதி என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அவர்களை குணப்படுத்தி விட முடியும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது” என்றார்.

அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஆர்.காந்தி

“அந்த வகையில் ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 222 பேருக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 290 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 29 பேருக்கு வாய் புற்றுநோய் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்த 3 வகையான புற்று நோய்களும் தொடக்க நிலையில் இருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் 100% முழுமையாக காப்பாற்றப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு மருத்துவ ரீதியாக மாபெரும் எழுச்சியை கண்டிருக்கிறது. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE