பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ் இருக்க வாய்ப்பு உள்ளது: இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா கருத்து

By KU BUREAU

கோவை: பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ் இருக்க வாய்ப்பு உள்ளது. விண்வெளியில் மிதக்கும் கழிவுகள், வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது என்று இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா கூறினார்.

கோவை வெள்ளலூரில் உள்ள`எஸ்எஸ்விஎம் வேர்ல்ட்' பள்ளியில் ‘இந்தியாவை மாற்றுவோம்’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. எஸ்எஸ்விஎம் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய விண்வெளி வீரரும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான விங்கமாண்டர் ராகேஷ்சர்மா பேசியதாவது:

விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்கும். விண்வெளியில் ஏவப்படும் ஒவ்வொரு செயற்கைகோளின் பணி முடிந்த பின்னர், சிலவற்றை மீண்டும் பூமிக்கு திரும்பி கொண்டுவந்து, கடலில் விழச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், பல செயற்கைகோள்கள் பணிக்காலம் முடிந்த பின்னரும் விண்வெளியில் சுற்றிக்கொண்டே உள்ளன. சில நேரங்களில் மோதல் சம்பவங்கள் நடக்கும்போது அவை உடைந்து ஸ்கிராப்பாக மாறி, விண்வெளியில் மிதக்கின்றன. இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவது மிகவும் சவாலாக மாறியுள்ளது.

எனவே, வருங்காலங்களில் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

ஏறத்தாழ 50 மணி நேரம் மட்டுமே வானில் பறந்த அனுபவம் இருந்தபோதும், எனது உயரதிகாரிகள் என் மீது நம்பிக்கை வைத்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்க அனுமதித்தனர். அது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். சிறிய தவறு செய்தால்கூட, விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எனக்கு 18 வயதானபோது, நான் சூப்பர்சானிக் ரகத்தைச் சேர்ந்த `மிக் 21' போர் விமானத்தை ஓட்டினேன். பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழ்வதைப்போல, ஏலியன்ஸ்இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தும், மனிதர்கள் வாழ்வுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். விண்வெளிக்குச் செல்வது மகிழ்ச்சி தரும். ஆனால், அங்கு பணியாற்றுவது சிரமம். பூமியில் வாழ்வதுதான் அனைத்திலும் சிறந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் நடந்த நிகழ்வுகளில் பேச்சாளர்கள் மதி கேசன், பல்கி சர்மா, காவேரி லால்சந்த், துஷ்யந்த் சவாடியா ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE