நன்மங்கலம் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி குடியிருப்போர் நல சங்கம் ஆர்ப்பாட்டம் 

By பெ.ஜேம்ஸ் குமார்

நன்மங்கலம்: தாம்பரம் அருகே நன்மங்கலம் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் அருகே நன்மங்கலத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி உள்ளது. ஏரி, முப்பது வருடங்களுக்கு முன்பு விவசாயத்துக்கு மிக முக்கியமான ஏரியாக இருந்திருக்கிறது. காலங்களும் மனித மனங்களும் மாறியதன் விளைவாக ஏரி சுருங்கிவிட்டது. இங்கிருந்து வெளியேறும் நீர், கோவிலம்பாக்கம் வழியாக, கீழ்கட்டளை ஏரிக்குச் செல்லும். அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வழியாக கடலுக்கு செல்லும். தற்போது அந்த ஏரி பராமரிப்பு இன்றி ஆகாய தாமரை செடிகளால் சூழ்ந்துள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் முற்றிலுமாக மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுற்று சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏரியை மீட்க வலியுறுத்தி ஏரியை சுற்றியுள்ள 20 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இணைந்து கூட்டமை தொடங்கி ஏரியை மீட்கும் முயற்சியில் செயல்பட தொடங்கியுள்ளனர். மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவரும் சமூக ஆர்வலருமான சந்தானம் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் தினகரன் தலைமையில் கைகளில் பதாகைகளை ஏந்தி ஏரியை மீட்க வலியுறுத்தி அரசின் கவனைத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்த நிறுத்த வேண்டும், ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும், ஏரியினை தூர் வாரி கரைகளை பலபடுத்த வேண்டும், உபரி நீரை கொண்டு செல்வதற்க்கு முறையான கால்வாய் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சமூக ஆர்வலர் சந்தானம் கூறியது: பகுதிவாசிகள் கூறியதாவது: ''நன்மங்கலம் ஏரி நிரம்பி வழியும் போது உபரி நீர் செல்வதற்கு கால்வாய் இல்லை. இதனால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இப்பகுதி தனி தீவு போலவே காட்சியளிக்கும். இதுதவிர கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக ஏரி தூர்வாரவில்லை. இதனால், ஏரியின் நான்கு பக்க கரைகளும் மிகுந்த பலவீனமாக உள்ளன.

ஏரி தூர்வாரப்படாததால், ஆகாய தாமரை செடிகள் ஏரி முழுக்க பரவியுள்ளது. மேலும், பல்லாவரம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் பகுதி ஏரியில் இருந்து வரும் கழிவு நீரும் கலந்து, ஏரியின் இயல்பு நிலை கெட்டுள்ளது. ஏரியை தூர்வாரினால் இதன் கொள்ளளவு மூன்று மடங்கு அதிகமாகி அருகிலுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து அழிவின் விழிம்பில் உள்ள நன்மங்கலம் ஏரிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். மேலும் உபரி நீர் கால்வாய் அமைத்து உபரி நீர் செல்வதற்கு உரிய வழித்தடத்தையும் உருவாக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினர்.

நீர்வளத்துறை அதிகாரிகளை கேட்டபோது, ''ஏரியை சீரமைக்கவோ, ஆழப்படுத்தவோ எந்த திட்டமும் இல்லை. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் நேரடியாக கீழ்கட்டளை ஏரிகளுக்கு செல்வதற்கு வழி இல்லை விவசாயம் நடைபெற்ற காலத்தில் காலி மனைகள் வழியாக மழைநீர் சென்று வந்தது. தற்போது விவசாயம் நடைபெறுவதால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் உள்ளது. நில எடுப்பு செய்து உபரி நீர் கால்வாய் அமைக்க அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பல்வேறு ஏரிகளை சீரமைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஏரிகளை அவர்கள் சீரமைக்கலாம் இதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE